Sunday 9 June 2019

தேவையற்ற கையெழுத்து இயக்கம்...!

ஊழல் தடுப்பு ஆணையத் தலைவராக லத்தீபா கோயா நியமனத்தை எதிர்த்து  பக்காத்தானின் ஒர் உறுப்புக் கட்சியான பி.கே.ஆர். இணையத் தளத்தில் ஒரு கையெழுத்து  இயக்கத்தை  தொடங்கியிருக்கிறது என்பதை அறியும் போது நமக்கு வருத்தத்தை அளிக்கிறது.

ஜ.செ.க. கட்சியில் உள்ளவர்கள் கூட பலர் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்திருக்கின்றனர்.  இன்னும் ப்ல வழக்கறிஞர்கள் கூட தங்களது ஆட்சேபங்களை பதிவு செய்திருக்கின்றனர்.

ஆனால் பி.கே.ஆர். என்னும் போது  -  ஆட்சேபங்கள் என்பது இயற்கைதான் - அவர்களின் கையெழுத்து இயக்கம் வேறு மாதிரியான  ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது. ஆமாம் இது ஏதோ மகாதீர்-அன்வார் இருவருக்கிடையே நடக்கும் பலப்பரிட்சை என்று தான் பேசப்படும். 

பி.கே.ஆர். ரின் இந்த கையெழுத்து இயக்கம் எந்தப் பலனையும் கொண்டு வரப் போவதில்லை.  மேலும் அந்த அளவுக்கு இந்த நியமனத்திற்கு  இப்படி ஒரு எதிர்ப்பைக் கொடுக்க வேண்டிய அவசியமுமில்லை.

இப்போது என்ன தான் பிரச்சனை? லத்திபா கோயா வைப் பற்றி எந்தப் பிரச்சனையும் இல்லை. அவருடைய திறமையைப் பற்றி யாரும் கேள்வி எழுப்பவில்லை. அவருடைய நியமனம் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லை  என்பது தான் குற்றச்சாட்டு.  

இந்த இடத்தில் ஒன்றை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். டாக்டர் மகாதீர் தான் செய்ய வேண்டிய வேலைகளை  உடனடியாகச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். அவர் வேகமான மனிதர். ஒவ்வொன்றுக்கும் "சட்டப்படி, சட்டப்படி" என்று சொல்லிக் கொண்டிருந்தால் எந்த வேலையும் ஓடாது.

இப்போதே பக்கத்தான் அரசாங்கத்தின் மீது பல குறை கூறல்கள்.  எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல மக்களும் குறை கூற ஆரம்பித்து விட்டனர். இப்படி பல குற்றச்சாட்டுகள் தமது காலத்தில் இருக்கக் கூடாது என்று பிரதமர் நினைக்கிறார். அதனால் என்ன என்ன முடியுமோ அதனை அவர் காலத்திலேயே செய்து முடிக்க வேண்டும்  என்று நினைப்பதில் தவறு  ஏதும் இல்லை! அதனால் தான் ஒரு சில முக்கிய நியமனங்களை அவரே செய்து முடிக்கிறார். 

அவர் செய்த நியமனத்தைக் குறை கூறுகின்றவர்கள் பக்காத்தான் அரசாங்கம் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறை வேற்றி விட்டனரா?   நூறு நாள் வாக்குறுதிகள்  என்னவாயிற்று?  அவைகளைக் கூட டாக்டர் மகாதிர் செய்து முடிக்கவில்லை என்று குறை கூறலாமே!

ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.  டாக்டர் மகாதிர் ஓர் இக்கட்டான சூழ் நிலையில் நாட்டின் பிரதமராக ஆனவர்.  அவர் அன்று கை கொடுக்காவிட்டால் இன்று பக்காத்தான் ஆட்சியில் இருக்க வாய்ப்பில்லை. அதனையும் மறக்க வேண்டாம். அவருக்கு என்று சில கொள்கைகள் உண்டு. அவர் அப்படித்தான் செயல்பட்டுப் பழக்கப்பட்டவர்! 

இப்போது அவர் பொறுப்பு ஏற்ற பின்னர் அவர் செய்த நியமனங்களில் எங்கு குறை உண்டு என்பதை மட்டும் பாருங்கள்.  ஏற்கனவே உள்ளவைகளைப் பற்றி அலசிக் கொண்டிருக்காதீர்கள். 

எந்த சட்டத்திட்டங்களைக் கடைப் பிடிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த சட்டத்திட்டங்களை வருங்கால பிரதமர்களுக்காக ஒதுக்கிவையுங்கள். டாக்டர் மகாதிர் ஓர் இடைக்கால பிரதமர் தான். அவரின் ஆயுசு கெட்டியாக இருந்தால் இந்த ஆட்சி முடியும் வரையில் இருப்பார்.  அது மட்டும் அல்ல. நாட்டை  ஊழல் இல்லா நாடாக மாற்றி அமைப்பார்.  அது நடக்கும்.

இந்தக் கையெழுத்து இயக்கம் வீண்!

No comments:

Post a Comment