Sunday 30 June 2019

மலேசிய ஏர்லைன்ஸ் ... என்ன ஆகும்?

மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனம் மூடுவிழா காணும் நிலையில் இருக்கிறது! ஆமாம்! கடனில் தத்தளித்துக்  கொண்டிருக்கும் அந்த நிறுவனத்தை என்ன செய்யலாம் என்று யாருக்கும் தெரியவில்லை!

முன்பு வாய் கிழியப் பேசியவர்கள் எல்லாம் இப்போது வாய் மூடி பேசா மடந்தையாகி விட்டார்கள்!  ஒருவருக்கும் பேசத் தகுதியில்லை!

இது போன்ற பெரிய நிறுவனங்களையெல்லாம் யார் வேண்டுமானாலும் நடத்தலாம் என்கிற எண்ணத்தை யாரோ ஒரு சிலர் விதைத்து விட்டார்கள்! அப்போது அதைக் கேட்க நமக்கும் ,மகிழ்ச்சியைக் கொடுக்கத்தான் செய்தது.

ஆனாலும் இப்போது புரிகிறது. வெறும் சவடால் தனம் எதற்கும் உதவாது! அனுபவம் வேண்டும். அப்படி இல்லையென்றாலும் முழு ஈடுபாடு வேண்டும். அரசியல் தலையீடு கூடாது.  மதங்களைப் புறம் தள்ள வேண்டும். எங்கள் இனம் மட்டும் தான் என்கிற இன வெறி இருக்கக் கூடாது. 

மாஸ் விமானத்தின் ஆரம்ப காலம் சிறப்பாகத் தான் இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை. அப்போது அதற்குத் தலைமையேற்றவர் ஒரு இந்தியர் என்பதாலேயே அவர் ஓரங்கட்டப்பட்டார்! ஒரு பெருந்தொழிலின் ஆரம்ப காலம் என்பது எவ்வளவு சிக்கலானது என்பது நமக்கும் ஓரளவு புரியும்.  ஆனாலும் அனாவசியமாக அவரை ஒதுக்கிவிட்டு .......  அப்புறம் என்னன்னவோ நடந்தது! கடைசியில் இன்றைய நிலைக்குக் கொண்டு வந்து விட்டது! இப்போது அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது!

இப்போது மூத்த பத்திரிக்கையாளர்  காதிர் ஜாசின் ஒரு கருத்தைச் சொல்லி இருக்கிறார்.  மாஸ் விமானத்தை ஏர் ஏசியா விமான நிறுவனம் வாங்கினால் என்ன என்று அவர் கேட்டிருக்கிறார். நிச்சயமாக அது ஒரு நல்ல கருத்து  என்பதில் ஐயமில்லை.  முன்பெல்லாம் இப்படி ஒரு கருத்தைச் சொல்லியிருந்தால்  பெரிய ஆர்ப்பாட்டமே நடந்திருக்கும்! இப்போது அந்த ஆர்ப்பட்டவாதிகள் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை! இப்போது மலேசியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் விமானங்கள் அனைத்தும் இலாபகரமாகத் தான் ஓடிக் கொண்டிருக்கின்றன!  மாஸ் மட்டும் தான் விதிவிலக்கு! 

ஏர் ஏசியாவுக்கு அதனை ஏற்று நடத்தும் வாய்ப்பு வந்தாலும் வரலாம் என்றே தோன்றுகிறது. வெளி நாட்டுக்காரர்களுக்கு விற்பதை விட உள்நாட்டு ஏர் ஏசியாவுக்கு விறபதையே பலர் விரும்புகிறார்கள். இது ஒரு மானப் பிரச்சனை   நாட்டின் நலன் முக்கியம். 

ஒன்று மட்டும் உறுதி.  டோனி  பெர்னாண்டஸ் ஏர் ஏசியா வை வாங்கும் போது அவர் எந்த விமான நிறுவனங்களையும் நடத்தவில்லை. விமான சேவைக்குப் புதியவர். வெற்றி பெற்றார் என்றால் அது அவருடைய உழைப்பு. உழைப்பு, உழைப்பு! 

டோனி இன்னொரு இரண்டு வெள்ளி நிறுவனத்தை வாங்குவாரா என்று பார்ப்போம்!

No comments:

Post a Comment