Sunday 16 June 2019

சட்டம் என்ன சொல்லுகிறது...?

சர்ச்சைக்குரிய  இஸ்லாமிய போதகர் ஜாகிர் நாயக் விஷயத்தில் பல் வேறு கருத்துக்கள் - வெட்டியும் ஒட்டியும் - பேசப்படுகின்றன.

இதில் குறிப்பாக பெர்லிஸ் முப்தி முகமது அஸ்ரி  கூறி வருகின்ற கருத்துக்களைக்  கொஞ்சம் நாமும் கவனிக்க வேண்டும். 

"அவரை இந்தியாவிற்கு அனுப்ப முடியாது!: என்று பிரதமர் டாக்டர் மகாதிர் கொண்டிருக்கும் கருத்துக்கு  அஸ்ரி  ஆதரவாக இருக்கிறார், அஸ்ரி கூறுகின்ற காரணங்கள் என்ன?   

"இங்குள்ள ஜாகிர் நாயக்கின் எதிர்ப்பாளர்கள் இந்தியாவிற்கு விசுவாசமாக இருக்கிறார்களே தவிர மலேசியாவிற்கு விசுவாசமாக இல்லை!  இந்தியாவில் நிலவும் கொடூரமான, வேற்றுமைகளை உடைய சட்டங்களுக்கு நாம் இடம் அளிக்கக் கூடாது அதனால் இங்குள்ள முஸ்லிம் பெருமக்கள் பிரதமரின் கருத்துகளுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்". என்கிறார் அஸ்ரி!

அஸ்ரி  முஸ்லிம்களைப் பார்த்து ஆதரவு தாருங்கள் என்று  கேட்டுக் கொள்ளுவதன் மூலம் ஒரு கருத்தை நமக்குப் புரிய வைக்கிறார்.  முஸ்லிம்  அல்லாதவர்களின் ஆதரவு ஜாகிர் நாயக்கிற்கு இல்லை  என்று அவரே சொல்லுகிறார்! நாம் சொல்லவில்லை!

ஏன் முஸ்லிம் அல்லாதவர்களின் ஆதரவு ஜாகிர்  நாயக்கிற்கு  இல்லை?  இங்கு ஒன்றை நாம் குறிப்பிடுவது  அவசியம்.  ஜாகிர் நாயக்  இங்கு  வந்ததுமே  தனது  கைவரிசையைக்  காட்ட  ஆரம்பித்துவிட்டார்!  இந்து மதம், கிறித்துவ மதம் என்று  பாரபட்சம்  இல்லாமல்  தாக்க  ஆரம்பித்துவிட்டார்.  அவர்  மற்ற மதங்களை  இழிவுபடுத்த ஆரம்பித்த  பின்னர்  தான் இங்குள்ள முஸ்லிம் அல்லதவர்கள் அவர்  மேல் காவல்துறையில்  புகார் செய்ய  ஆரம்பித்தனர்.  

மற்ற மதத்தினர்  மீது  அவர்  தாக்குதலை  ஆரம்பித்த போது பெர்லிஸ் முப்தி எங்கிருந்தார் என்று நமக்குத் தெரியாது.  ஆனால்  அவர் வாய் திறக்கவில்லை என்பது நமக்குத் தெரியும். 

அந்நேரத்தில் இந்தியா அவரை இந்தியாவுக்கு அனுப்புங்கள் என்று சொல்லவில்லை. இங்கிருந்தவர்களும் அவரை அவர் நாட்டுக்கே  திருப்பி அனுப்புங்கள்   என்று  சொல்லவில்லை.

அனைத்துக் காரணங்களுக்கும் ஜாகிர் நாயக் மட்டுமே. தீவிரவாதத்தை நம் நாட்டிலும் தூண்டி விட்டவர்.  சமீப காலங்களில் கூட இந்துக்களை தம் பக்கம் இழுத்து  அவர்கள் இப்போது   இந்து சமயத்தைத் தாக்கிக் கொண்டிருக்கின்றனர்.

நாம் சொல்ல வருவதெல்லாம்  சட்டம் என்ன சொல்லுகிறதோ அதனைச் செய்யுங்கள் என்பது தான்.  சட்டம் மட்டுமே உயர்ந்தது!

No comments:

Post a Comment