தாய்மொழிப்பள்ளிகள் முடக்கப்பட வேண்டும் என்னும் பாஸ் கட்சியினரின் கூக்குரல் தங்களை மலாய்க்காரர்களிடையே ஒரு ஹீரோவாகக் காட்டிக் கொள்ளும் நடவடிக்கை என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை என்பதாகத் தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்!
ஏற்கனவே அம்னோ மாநாடுகளில் இது போன்ற ஹீரோக்கள் நிறையவே இருந்தனர் என்பதும் நமக்குத் தெரியும். இப்போது பாஸ் கட்சியில் உள்ள ஹீரோக்களும் அதேயே ஊதி வருகின்றனர்.
அவர்கள் இப்படிப் பேசுவதின் மூலம் அவர்களின் நோக்கம் மலாய் வாக்கு வங்கிகளைக் கவரத்தான் என்பது ஒன்றும் இரகசியமல்ல. இவர்களின் நோக்கமே இப்படிப் பேசினால் தான் மலாய்க்காரர்கள் தங்களுக்கு ஆதரவு தருவார்கள் என்று நினைக்கிறார்கள்!
ஆனால் மக்களுக்கு இது ஒன்று பெரிய பிரச்சனையல்ல. இன்று தமிழ்ப்பள்ளிகளில் படிக்கின்ற மலாய் மாணவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இப்போதெல்லாம் எந்தப் பள்ளிகள் அருகில் இருக்கின்றனவோ அந்தப் பள்ளிகளில் தங்கள் குழைந்தைகளைச் சேர்ப்பவர்கள் இருக்கிறார்கள். போக்குவரத்து செலவுகள், இன்னும் பிற செலவுகள், இவைகளை வைத்துப் பார்க்கும் போது அதுவே சிறந்த முடிவாக அவர்களுக்குத் தெரிகிறது.
நமக்குத் தெரிந்தவரை தேசியப்பள்ளிகளை விட மற்ற மொழிப்பள்ளிகள் எல்லா வகையிலும் கொடிக்கட்டிப் பறக்கின்றன! உண்மையைச் சொன்னால் ஆசிரியர் பற்றாக் குறையை எல்லாக் காலங்களிலும் இந்தப் பள்ளிகள் எதிர் நோக்குகின்றன. ஆசிரியர் பயிற்சி பெறாத, தற்காலிக ஆசிரியர்கள் என்றுசொல்லி, அவர்களையே நிரந்தரமாக பணியில் அமர்த்தப்படுவதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இவ்வளவு குறைபாடுகள் இருந்தும் தேர்ச்சி விகிதத்தில் தேசியப்பள்ளிகளால் இவர்களை நெருங்க முடியவில்லை என்று சொல்லலாம்.
தேசியப்பள்ளிகளில் எல்லா வசதிகளும் உண்டு. அத்தோடு சரி. அதிகப் பிரச்சனைகள் அங்கிருந்து தான் ஆரம்பமாகின்றன! முக்கியமான குற்றச்சாட்டுகள் என்றால் ஆசிரியர்கள் மாணவர்கள் மீதோ அவர்களின் கல்வியின் மீதோ அக்கறை காட்டுவதில்லை என்பது தான்.
இன்று மாணவர்கள் பள்ளியில் படிப்பதை விட டியுஷன் சென்டர்களில் படிக்கும் நேரமே அதிகம். இதற்குக் காரணம் தேசியப் பள்ளிகளின் தரமற்ற கல்வியே! இதில் மாற்றுக் கருத்து ஒன்றுமில்லை!
இதனைச் சரி செய்ய வக்கில்லாதவர்கள் தாய்மொழிப்பள்ளிகளை முடக்க வேண்டும் என்று சொல்லுவது முட்டாள் தனமான கருத்து என்பதை ஒப்புக் கொள்ளவேண்டும்.
இதற்குப் பதிலாக தேசிய மொழிப்பள்ளிகளின் தரத்தை உயர்த்த ஆவன செய்ய வேண்டும். அது தான் நாட்டுக்கு நல்லது. புரிந்து கொண்டால் சரி!
No comments:
Post a Comment