Saturday 1 June 2019

பட்டாசுகள் தடையா..?

சாமி! எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்!

நம் நாட்டில் பட்டாசு தடை செய்யப்பட்ட ஒன்றா என்று இது நாள் வரை எனக்குத் தெரியவில்லை!  நான் வியாபாரத் துறையில் காலடி எடுத்த வைத்த ஆரம்ப காலத்தில்  பெருநாள் காலங்களில் பட்டாசுகளும் விற்று வந்தேன்.  ஆனால் ஒரு சில ஆண்டுகள் தான் என்னால் விற்க முடிந்தது. அதன் பின்னர் தடை செயப்பட்டு விட்டதாக எனக்குச் சொல்லப்பட்டது.

 இது நடந்து சுமார் இருபத்தைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. என்னைப் போன்று கடை வைத்து வியாபாரம் செய்தவர்கள் தான் தடை செய்யப்பட்டனரே தவிர மற்றபடி பட்டாசுகளுக்கு எந்தத் தடையும் இல்லை! கடைகளில் கிடைக்காவிட்டால் என்ன?  அது சந்தைகளிலும், மூலை முடுக்குகளிலும் அனைத்து இடங்களிலும் தாராளமாக கிடைத்தன.  ஏன்? இப்போதும்  கிடைக்கின்றன!

இது என்ன தடை என்பதை இது வரை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை!  நமக்குப் புரிய வருவது எல்லாம் பட்டாசுகளைக் கடைகளில் விற்கக் கூடாது, அவ்வளவு தான்! அது தான் பட்டாசு மீதான தடை என்பதாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ள்து  மற்றபடி கடைகளுக்கு வெளியே, அஞ்சடிகளில் பேராங்காடிகளின் சுற்றுப் புறங்களில்  - இப்படி எங்கு வேண்டுமானாலும் பட்டாசுகளை  விற்கலாம். அதற்குத் தடையில்லை!

இப்படி தடையில்லை என்று தைரியமாகச்  சொல்லுவதற்கு ஒரு காரணம் உண்டு.  நான் வாழுகின்ற பகுதி மலாய்க்காரர்கள்  அதிகமாக உள்ள ஒரு பகுதி.  இங்கு  காவல்துறையில் வேலை செய்பவர்கள் பலர் உண்டு. அவர்களும் தான் பட்டாசுகளை வெடிக்கிறார்கள்! அவர்கள் குடும்பத்தினரும் தான் பட்டாசுகளை வெடிக்கிறார்கள்! அப்படி என்றால் அவர்களுக்கு நடப்பில் உள்ள சட்டம் தெரியாதா, என்ன? 

எனக்குத் தெரிந்தது எல்லாம்  இப்படி  சட்டம் தெரிந்தவர்  தெரியாதவர்  எல்லாம்  பட்டாசுகளை வெடிக்கும் போது  அப்புறம் என்ன தடை? 

அரசாங்கம் இந்த பட்டாசு வெடிகளைப் பற்றி சரியான, தெளிவான நிலைமையில் இல்லை என்பது தெரிகிறது.  ஏதோ தடுமாற்றம் தெரிகிறது!

இந்தத் தடை என்பது பெரிய தலை போகிற விஷயம் அல்ல.  வேண்டும் என்றால் வேண்டும். வேண்டாம் என்றால் வேண்டாம். அவ்வளவு தான். வேண்டும் என்றால் பெரிய பெரீய வெடி ஓசைகளை எல்லாம் தடைச் செய்துவிட்டு சிறிய சிறிய - சிறியவர் பெரியவர் - அனைவரும் விளையாடும் படியான மத்தாப்பு போன்றவைகளை விளையாட அனுமதிக்கலாம்.  இப்போது எது வெடி, எது வெடிகுண்டு, எது துப்பாக்கிச் சூடு என்று பிரித்துப் பார்க்க முடியவில்லை!

அரசாங்கம் மக்களுக்குத் தெளிவுபடுத்த கடமை உண்டு. தடுமாற்றம் தேவை இல்லை. 

இப்போது பட்டாசுகளுக்குத் தடையில்லை என்றே தோன்றுகிறது!                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                     

No comments:

Post a Comment