நமது மலேசிய அரசியலில் ஒருவரை வீழ்த்துவதற்கோ அல்லது இழிவு படுத்துவதற்கோ ஆபாச காணொளிகள் அடிக்கடி வலம் வந்து கொண்டிருக்கின்ற்ன.
சொல்லப் போனால் இது போன்ற செயல்களை ஊக்குவிப்பவர்கள் அரசியல்வாதிகள் தான். இன்று ஊக்குவிப்பவர்கள் நாளை அவர்களே இந்த கண்ணிகளில் மாட்டலாம்! யாரும் தப்ப முடியாது. வாள் எடுத்துவன் வாளால் தான் வீழ வேண்டும்!
தங்களால் இனி முடியாது, தங்களால் இனி அரசியலில் தாக்குப் பிடிக்க முடியாது, இந்த தலைவனை வீழ்த்தினால் தான், தான் தலைவனாக வர முடியும், இந்த அமைச்சரை காலி பண்ணினால் தான் நாளை நான் அமைச்சராக வர முடியும் என்று நினைப்பவர்கள் தான் இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்! இவர்கள் நோக்கம் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவது. ஓர் ஒழுக்கமான அரசியல்வாதியை இப்படி குறுக்கு வழியைப் பயன்படுத்தி அவர்களை ஒழிக்க நினைப்பது.
ஆனால் இந்த ஒழுக்கமற்ற செயல்களைச் செய்பவர்கள் எதற்கும் உதவாத அரசியல்வாதிகள் என்பது மக்களுக்குத் தெரியும். இவர்கள் எல்லா வகையிலும் ஒழுக்கமற்றவர்கள். குடும்பத்திலும் சரி, மக்களிடையேயும் சரி இவர்களால் எந்தக் காலத்திலும் நல்லவர்கள் என்று பெயர் எடுக்க முடியாது! ஏனெனில் நல்லவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதில்லை.
இப்போது கடைசியாக இந்தக் காணொளியில், பொருளாதார அமைச்சர் அஸ்மி அலியின் பெயர் வைரலாகிக் கொண்டிருக்கிறது என்பது வருத்தமான விஷயம் தான். அவர் அதனை மறுத்திருக்கின்ற அதே நேரத்தில் தடாலடியாக இன்னொருவர் அவரோடு இருக்கும் நபர் நான் தான் என்று ஒப்புக் கொண்டிருக்கிறார்! எல்லாமே ஏதோ நாடகம் போன்று நடந்து கொண்டிருக்கிறது! எது உண்மை எது பொய் என்று நம்மாலும் ஊகிக்க முடியாது. எல்லாம் பணம் படுத்துகிற பாடு என்று தான் சொல்ல முடியும்!
இது போன்ற வீண் வேலைகளைச் செய்து கொண்டிருக்கும் இந்த வேலையற்ற கும்பல்களைக் கையும் களவுமாகப் பிடிக்கப்பட வேண்டும். காவல்துறை இது போன்ற காணொளிகளின் பின்னணியில் இருப்பவர்களைக் கண்டு பிடித்து அவர்களைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்.
அரசியல்வாதிகளைக் கையும் களவுமாகப் பிடிப்பது என்பது அவ்வளவு எளிதல்ல என்பது நமக்குப் புரிகிறது. அதற்காக அவர்களை அப்படியே சுதந்திரமாக விட்டு விட முடியாது! இப்படி ஒரு அநாகரீக கலாச்சாரத்தை வளர்த்துக் கொண்டே போக முடியாது. எங்காவது ஓர் இடத்தில் அதற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டி உள்ளது. கடுமையான தண்டனைகளுக்கு அவர்களை உட்படுத்த வேண்டும்.
ஆபாச காணொளிகள் இனி தலை தூக்காதவாறு பார்த்துக் கொள்ளுவது காவல்துறையினரின் கடமை! அதற்குக் காவல்துறைக்குப் போதுமான "கெத்து" இருக்க வேண்டும்! பொறுத்திருப்போம்!
No comments:
Post a Comment