ஒன்று: எந்த ஒரு இந்த இஸ்லாமிய நாடும் இந்த இஸ்லாமிய அறிஞரை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. அவர் அறிஞர் என்பதை விட தீவிரவாதத்திற்குத் துணை போகிறவர் என்று அடையாளம் காணப்படுகிறார். சுருக்கமாகச் சொன்னால் அவர் ஒர் இஸ்லாமியத் தீவிரவாதி என்பதாகத்தான் அவர் மீதான குற்றச்சாட்டு.
மற்ற நாடுகளில் என்ன நடந்தது என்பதை விட்டு விடுவோம். நமது நாட்டில் என்ன நடந்தது? கிளந்தானில் நடந்த ஒரு பொது கூட்டத்தில் அவர் இந்து மதத்தினரைப் பற்றி, இந்தியர்களைப் பற்றி தரக் குறைவாகப் பேசினார். சீனர்களையும் வம்புக்கு இழுத்தார். இதுவும் தீவிரவாதம் தான்!
அவர் இந்நாட்டில் தங்குவது என்பது தற்காலிகம் தான். நிரந்தர தங்கும் உரிமையை அவர் பெற்றிருந்தாலும் அந்த உரிமை எந்த நேரத்திலும் மீட்டுக் கொள்ளப்படலாம்! அவர் அரசியலில் தலையிட முடியாது. இந்த நாட்டில் தங்குவதற்கு அது ஒரு முக்கிய நிபந்தனை.
ஆனாலும் அவர் பேசுகிறார். பேச தடை விதிக்க முடியவில்லை. பொது மேடைகளில் இல்லையென்றாலும் உள் அரங்கங்களில் பேசலாம். அதுவே அவருக்குப் போதுமானது! உள் அரங்கங்களில் அரசியல் பேசலாம். தீவிரவாதம் பேசலாம். பிற மதத்தினரை இழிவு படுத்தலாம்! இதன் மூலம் இத்தனை ஆண்டுகள் விழிப்படையாத நிலையில் இருந்தவர்கள் இனி ஸாகிர் நாயக்கின் மூலம் விழிப்படைவார்கள்!
இந்த விழிப்புணர்வு எந்த வகையில் மலேசியர்களுக்கு நன்மை பயக்கும் என்பது உடனடியாகத் தெரியாவிட்டாலும் அதன் பாதிப்பு இருக்கத்தான் செய்யும்.
இவர் இந்நாட்டிற்கு வந்த ஆரம்ப காலத்தில் இவருடைய உரைகளைக் கேட்டு இங்கிருந்து தப்பியோடி அரபு இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்களில் சேர்ந்த சிலர் கடைசியில் அங்கேயே மடிந்து போனதாக வந்த செய்திகளும் உண்டு.
ஆனாலும் ஸாகிருக்கு இன்னும் நல்ல நேரம் தான். அவருக்கு எதிர்கட்சிகளின் ஆதரவு செம்மையாக இருக்கிறது. பாஸ் கட்சியும் அம்னோ கட்சியும் அவரைத் தலைமேல் வைத்துக் கொண்டு கூத்தாடுகின்றன! இந்தக் கட்சிகளில் உள்ள பலருக்கு ஸாகிர் என்ன பேசுகிறார் என்பது கூட தெரியாது! அவருடைய ஆங்கிலம் பலருக்குப் புரியாது! ஆனாலும் அவர் ஓர் இஸ்லாமியப் போராளி என்பதாக பலர் நினைக்கின்றனர்!
பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அவர் போராளியா அல்லது போலியா என்பது தெரியவரும்!
No comments:
Post a Comment