சிறு பிள்ளைகளைப் பற்றி நமக்குத் தெரியும். அவர்களின் தேவைகள் என்பது கணக்கில் அடங்கா! கண்ணில் பட்டதையெல்லாம் கேட்பார்கள். அதுவும் இந்தக் காலத்தில் கைப்பேசி என்பது தான் சிறு குழந்தைகளிலிருந்து வளர்ந்து விட்ட பிள்ளைகள் வரை முக்கியமான ஓர் அங்கமாக அமைந்து விட்டது!
ஆனாலும் இதோ ஒரு பள்ளி மாணவி. தமிழ் நாடு திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஒரு கிராமத்தில், அரசு உயர்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவி. கைப்பேசி கேட்கவில்லை. விளையாட்டுப் பொருள்கள் கேட்கவில்லை.
மாணவி நதியா தனது தந்தை சிவக்குமாருடன் ஒரு சில மாதங்களாகப் பேசுவதை நிறுத்தி விட்டார். ஒரு மாதம் இரண்டு மாதங்கள் அல்ல சுமார் எட்டு மாதங்கள் அவரது தந்தையோடு பேசுவதில்லை. ஒரே காரணம் அவரது தந்தை சிவக்குமார் தினசரி குடித்துவிட்டு வந்து அவரது தாயாரோடு தகராறு செய்வதை அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
தந்தை சிவக்குமார் பல முயற்சிகள் எடுத்தும் மகள் நதியா அவருடன் பேசவில்லை. தந்தை சிவக்குமார் இப்போது இறங்கி வந்தார். மகளுடன் சமரசம் பேசினார். "உன்னோடு பேச நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார். அப்போது மகள் நதியா அம்மாவுடன் தகராறு செய்வதை நிறுத்த வேண்டும். அடுத்து அவரது பள்ளி அருகே நாறிக் கொண்டிருக்கும் குளத்தை சுத்தம் செய்து கொடுக்க வேண்டும் என்பது தான் அவர் விதித்த நிபந்தனை.
அடுத்த நாளே களத்தில் இறங்கினார் சிவக்குமார். சுத்தம் செய்து கொடுத்தார். ததந்தையும் மகளும் சமரசம் ஆனார்கள்.
மாணவி நதியா இயற்கையை நேசிப்பவர். நீர்நிலைகள் மேல் ஆர்வம் உள்ளவர்.
கடந்த கால தலைமுறை ஏரி, குளம் என்பதையெல்லாம் மறந்து போன ஒரு தலைமுறை. அதனால் தான் இன்று தண்ணிருக்காக தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
இனி நதியா போன்ற இன்றைய தலைமுறை இயற்கையை நேசிப்பதை நாம் போற்ற வேண்டும். இன்னும் பல நாதியாக்களை நமது பள்ளிகள் உருவாக்க வேண்டும். குழந்தைகள் பொது நோக்கத்தோடு வளர வீட்டில் உள்ள பெரியவர்கள் உதவ வேண்டும்.
நல்லதொரு தொடக்கம்! இயற்கையை நேசிப்போம்! சுவாசிப்போம்!
No comments:
Post a Comment