Friday 6 September 2019

மணி ஓசை வரும் முன்னே..!

இந்து மதத்தை இழிவு படுத்திப் பேசிய இஸ்லாமிய போதகரும்,ஜாகிர் நாயக்கின் சீடருமான ஸம்ரி வினோத் மீது எந்த நடவடிக்கையும் இல்லை  என்பதாக சட்டத்துறை அலுவலகம் அறிவித்து விட்டது!

அது மட்டும் அல்லாமல் அதற்கு என்ன காரணம் என்பதை வெளிப்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை என்பதையும் அந்த அலுவலகம் தெளிவு படுத்தி விட்டது!

அது போதும்.  இப்போதைக்கு நாம் ஒரு முடிவுக்கு வந்து விடலாம். இனி இந்து மதத்தைத் தாக்கிப் பேசினால், தாராளமாகப் பேசலாம்.  அப்படி பேசியவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்பதை சட்டத்துறை அலுவலகம் ஒரு தீர்மானத்திற்கு வந்து விட்டது.  

இனி கிளந்தானில் தான் பேச வேண்டும் என்கிற அவசியம் இல்லை. மற்ற மாநிலங்களிலும் பேசலாம் யாரும் ஒன்றும் செய்த விட முடியாது என்பது தான் நமக்கு சட்டத்துறை கொடுக்கும் செய்தி.

சீடர்,  ஸம்ரி வினோத்துக்கான சட்டத்துறையின் பதில் இது தான்.  சீடருக்கே இது தான் பதில் என்றால்  குரு, ஜாகிர் நாயக்கிற்கு என்ன பதிலாக இருக்கும்?  அவருடைய வழக்கும் நிலுவையில் நிற்கின்றது அல்லவா?  பதில் வேறு மாதிரியாக இருக்கும் என்று நாம் நினைப்பதற்கு எந்த சாத்தியங்களும் இல்லை!

சட்டத்துறையின் பதில் அதே பதிலாகத்தான் இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஜாகிர் நாயக் இப்போது மலேசிய குடியுரிமை பெற்றவர்.  ஸம்ரி வினோத்துக்கு என்ன என்ன தகுதிகள் இருக்கின்றனவோ அதே தகுதிகள் ஜாகிருக்கும் உண்டு என்பதை மறக்க வேண்டாம்!

அவருக்கு நாட்டில் அடைக்கலம் கொடுத்திருப்பதே மற்ற சமயங்களை இழிவு படுத்திப் பேச வேண்டும் என்பதற்காகத் தான்.  அவரைப் பேச விடாமல் தடுப்பது சட்ட விரோதம் என்று தான் அவர் சொல்லி வருகிறார். அவர் பக்கம் நியாயம் உண்டு என்பதைத் தான் சட்டத்துறை அலுவலகம் ஸ்ம்ரி மீதான் தீர்ப்பின் மூலம் நமக்குச் சொல்லும் செய்தி. 

ஜாகிர் நாயக்கின் சட்டத்துறையின் தீர்ப்பு என்ன்வாக இருக்கும்? ஸம்ரி வினோத்துக்கு என்ன தீர்ப்பு அளிக்கப்பட்டதோ அதே தீர்ப்பு தான் இவருக்கும் கொடுக்கப்படும் . அவர் குற்றவாளி அல்ல என்பதாகத்தான் தீர்ப்பு அமையும்!

ஆனால் ஒன்று. அவர் குற்றவாளி அல்ல என்று தான் தீர்ப்பு வருமே தவிர அதற்கான விளக்கத்தை நாம் பெற முடியாது! அந்த விளக்கத்தைக் கேட்பதே குற்றம் என்று சொன்னாலும் சொல்லலாம்.

சில அரசியல்வாதிகளுக்குப் பயந்து அனைத்தையும் மூடி மறைக்கும் வேலை இனியும் தொடரலாம்!

இப்போதே மணியோசை கேட்கிறதே!

No comments:

Post a Comment