Friday 27 September 2019

3,000 இந்தியர்கள் பாதிப்பு

இந்தியா, தெலுங்கானா மாநிலத்திலிருந்து வேலை தேடி வந்த 3,000 பேர் வேலையும் கிடைக்காமல், தங்களது பணத்தையும் இழந்து கடைசியில் அவர்களது நாட்டுக்கும் திரும்பவும் முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

போலி ஏஜென்டுகளை நம்பி வந்த இவர்கள் சட்டவிரோதமாக நான்காண்டுகள் வரை இங்கு தங்கி இருந்திருக்கின்றனர். இப்போது அரசு இவர்களுக்கான மன்னிப்புத் திட்டத்தின் கீழ் நாடு திரும்ப வாய்ப்புக் கொடுத்திருக்கின்றது. ஆனாலும் சில நிபந்தனைகள் உள்ளன.  இவர்கள் இங்கு தங்கியிருந்ததற்கான அபராதம் 700 வெள்ளியும் விமான டிக்கெட் கட்டணம் 400 வெள்ளியும் கட்ட வேண்டும். அதன் பின்னரே அவர்கள் தங்களது நாடு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள். இந்த மன்னிப்புத் திட்டம் என்பது ஆகஸ்ட் மாதம் 1-ம் ததி தொடங்கி டிசம்பர் மாதம் 31-ம் தேதி வரை நடப்பில் இருக்கும்.

ஆனாலும் இவர்களிடம்  கட்டுவதற்குப் பணம் இல்லாத நிலையில் ஒன்றும் செய்ய முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். இப்போது இந்திய அரசாங்கத்தின் உதவியைத் தவிர வேறு யாரிடமிருந்தும் எந்த உதவியும் கேட்க முடியாத நிலை.

இந்த மன்னிப்புத் திட்டத்தின் கீழ் அவர்கள் தங்களது நாட்டுக்குத் திரும்பவில்லை என்றால் அவர்கள் சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்ததற்காக அவர்கள் சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

ஒன்றைக் கவனிக்க வேண்டும். தெலுங்கானா மாநிலத்தில் இருந்து 3,000 பேர் என்றால் எல்லா இந்திய  மாநிலங்களிலும் இருந்தும் எத்தனை  ஆயிரம் பேர் என்று கணக்கிட்டால் தலையே சுத்தும்!

நம்மிடமும் சில கேள்விகள் உண்டு. இவர்கள் சட்டவிரோதத் தொழிலாளர்கள் என்பது நமக்குப் புரிகிறது. போலி ஏஜென்டுகளை நம்பி ஏமாந்தவர்கள் என்பது இந்த நாடே அறியும். இந்த போலி ஏஜென்டுகள் என்ன ஆனார்கள்? அவர்களும் சிறையில் இருக்கிறார்களா? அல்லது இன்னும் எந்த நாட்டுக்குப் போய் யாரை ஏமாற்றலாம் என்று ஒவ்வொரு நாடாக ஊர்வலம் வருகிறார்களா?

போலி ஏஜென்டுகள் என்றாலும் அவர்களுக்கும்  உள்நாட்டில் சரியான தொடர்புகள் உண்டு.  எந்த ஒரு தொடர்புகளும் இல்லாமல் அவர்களாலும் இது போன்ற போலி வேலைகளைச் செய்ய முடியாது. அரசு அதிகாரிகளின் உதவிகள் இல்லாமல் இவர்களால் இயங்க முடியாது.

ஆனாலும் நமது சட்டங்களால் இவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. 

போலிகள் தப்பித்துக் கொள்ள எத்தனையோ வழிகள்! அப்பாவிகள் நேர்மையாகக் கூட தப்பிக்க வழி இல்லை!

No comments:

Post a Comment