Friday 13 September 2019

நம்பிக்கை நசிகிறதா...?


 பக்காத்தான் அரசாங்கத்தின் மீது மக்களின் நம்பிக்கை நசிகிறதா? ஆம், நசிகிறது என்கிறார் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ!

மக்களின் பிரதிநிதியாக அவர் சொல்லுகிறார்.  ஆமாம் நாமும் அதனைத் தான் சொல்லுகிறோம். அவர் சொல்லுவதற்கும் நாம் சொல்லுவதற்கு ஒரு வித்தியாசம் உண்டு. அவரால் வெளிப்படையாக யார் இதற்குக் காரணம் என்று சொல்ல முடியவில்லை. 

நமக்குத் தெரியும்.  நாம் சொல்லுவதால் ஒன்றும் பிரச்சனை இல்லை. நாம் தேர்தலில் போட்டிப்போட போவதில்லை! அதுவே நமது பலம்.

இன்றைய நிலையில் நமது குற்றச்சாட்டு என்று ஒன்று வந்தால் அது பிரதமர், டாக்டர் மாகாதிர் மேல்  தான்!

புதிய அரசாங்கம் ஆட்சி அமைத்த போது அவருடைய தயவு  புதிய அரசாங்கத்திற்குத் தேவைப்பட்டது. இப்போது அதுவே, அவருடைய தேர்வு, புதிய அரசாங்கத்திற்குத் தலைவலியாக மாறி விட்டது!  முன்னுக்குப் போகாமலும் பின்னுக்கு வராமலும் அனைத்துக்கும் முட்டைக்கட்டையாக அவருடைய பதவி இடைஞ்சலைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது என்று தான் இப்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்!

முறைப்படி அவர் பதவியை பிரதமர்- நியமனர் அன்வார் இப்ராகிமிடம் பதவியை ஒப்படைத்திருக்க  வேண்டும். ஆனால் அவர் சொன்னது போல நடந்து கொள்ளவில்லை!  அவர் இழுத்தடித்துக் கொண்டும், கிண்டலடித்துக் கொண்டும் பதவியில் இருந்து கொண்டிருக்கிறார்!  யாராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை!

பிரதமர் பதவி வலிமையானது.  அவர் தான் மற்றவர்களை விரட்டிக் கொண்டும் துரத்திக் கொண்டும் இருக்கிறார்!  அவர் பதவியை விட்டுக் கொடுக்கும் வரை யாரும் அவரை ஒன்றும் செய்து விட முடியாது! அவர் பழைய பாணி அம்னோ அரசியலை நடத்திக் கொண்டிருக்கிறார்!  அவருடைய கட்சியை வலிமையான கட்சியாக உருவாக்கிக் கொண்டிருக்கிறார். அவர் கட்சியில் உள்ளவர்கள் பதவியை விட்டுக் கொடுக்க வேண்டாம் என்கிறார்கள்! அதனால் அவர்களுக்கு இலாபம்! 

மக்கள் தான் அவரை வேண்டாம் என்கிறார்களே தவிர அவருடைய பெர்சத்து கட்சியினர் அவரை விட்டுக் கொடுக்க தயாராக இல்லை! அதே போல அவர் தொடர்ந்து பதவியில் நீடிக்க வேண்டும் என்பதற்கு  பாஸ் கட்சியும் ஆதரவு கரம் நீட்டுகின்றது!  எல்லாம் சுயநலம்  தான். கலங்கிய குட்டையில் மீன் பிடிக்கின்ற கதை!

பிரதமர் பதவிக்கு ஒரு முடிவு  வரும் வரை மக்களுடைய நம்பிக்கை நசிந்து கொண்டு தான் இருக்கும்.  அரசாங்கம் இயங்க வில்லை என்றால் யாருக்கு என்ன இலாபம்? இந்த நசிவுக்கு பக்காத்தான் அரசாங்கம் தான் முழு பொறுப்பை ஏற்க வேண்டும்.

No comments:

Post a Comment