Thursday 12 September 2019

இதுவும் சாத்தியமே!

இஸ்லாமிய சமயப் போதகர், ஸாகிர் நாயக் புகார் செய்ததின் பேரில் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி, காவல் துறையினரால்  ஐந்து மணி நேர விசாரணைக்கு உள்ளானார் என்பதை அறியும் போது நமது காவல துறை எத்தனை நீதியுடன் நடந்து கொள்ளுகிறது  என்பது புலனாகிறது!

குற்றம் என்றால் யார் செய்தாலும் குற்றமே என்பது  தான் காவல்துறையின் கொள்கை.

ஸாகிர் நாயக் வெளி நாட்டிலிருந்து இங்கு ஓடி வந்து அடைக்கலம் கோரியிருக்கலாம்!   தப்பித்துக் கூட வந்திருக்கலாம்! பண பரிமாற்றத்தில் தில்லுமுள்ளுகள் நடந்திருக்கலாம்! தீவிரவாதம் பேசியிருக்கலாம்!

ஆனால் அவைகள் அனைத்தும் இந்த நாட்டில் நடந்தவை அல்ல. வெளி நாடுகளில் நடந்தவை.

இங்கு, இப்போது அவர் மலேசியாவில் நிரந்தரமாக தங்கும் உரிமைப் பெற்றவர் என்று சொல்லப்படுகிறது. ஒரு வேளை மலேசியக் குடியுரிமை பெற்றவராகக் கூட இருக்கலாம். 

அதனால் அவர் இந்நாட்டில் அரசியலில் தலையிடவும் அவருக்கு உரிமை இருப்பதாகவே நமக்குத் தோன்றுகிறது. அரசாங்கம் அந்த அளவுக்கு அவரைத் தாங்கிக் கொண்டிருக்கிறது!

வெளி நாட்டவர் ஒருவர் இந்நாட்டில் குடியுரிமை பெற அவருக்கு என்ன தகுதி வேண்டும்? ஒன்று அவர் நாட்டில் பெரிய முதீலிடுகளோடு வந்திருக்க வேண்டும். அப்படியும் நடந்திருக்கலாம். நஜிப் இருந்த பண நெருக்கடியில் ஸாகிர் உதவியிருக்கலாம்.  அது சாத்தியமே!

இன்னொன்று இந்த நாட்டில் குடியுரிமை பெற இங்குள்ள மலேசியப் பெண்ணை திருமணம் செய்தவராக இருக்க வேண்டும். இது வரை இல்லையென்றாலும் இனி மேல் கூட நடக்கலாம். பெர்லிஸ் மாநில முப்தியிடம் சொன்னாலோ அல்லது பாஸ் கட்சியினரிடம் சொன்னாலோ அதற்கான் ஏற்பாடுகளை உடனடியாகச் செய்யத் தயாராக இருக்கிறார்கள்! அல்லது ஏற்கனவே அப்படி ஒரு ஏற்பாடு நடந்ததோ என்னவோ தெரியவில்லை!

நாம் இங்கு சொல்ல வருவதெல்லாம் காவல்துறை ஸாகிர் நாயக்கின் நிலை ப்ற்றி பொது மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். அவரது குடியுரிமை அல்லது நிரந்தர தங்கும் அனுமதி பற்றி  தெளிவு படுத்த வேண்டும்.

காவல்துறையின் நீதி நேர்மை பற்றி நாம் அறிவோம். பேராசிரியர் இராமசாமியை அவர்கள்  விசாரித்தார்கள். அவர்கள் விசாரித்தது இந்தியர்களுக்குத் தலைகுனிவு தான். அதே போல ஸாகிர் நாயக்கின் நிலை பற்றியும் பொது மக்கள் அறிய வேண்டும்.

காவல்துறை நீதியை நிலை நிறுத்த வேண்டும்! இது சாத்தியம் தான்!

No comments:

Post a Comment