"ராட்சசி" திரைப்படத்திற்கு நல்லதொரு விளம்பரத்தைக் கொடுத்திருக்கிறார் கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக்.
அப்படியெல்லாம் இலவச விளம்பரம் கொடுத்தும் கூட படம் எந்த அளவுக்கு மக்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது என்பது தெரியவில்லை!
முதலில் இந்தப் படம் எப்போது தியேட்டருக்கு வந்தது, எப்போது தியேட்டரை விட்டுப் போனது என்பது கூட தெரியவில்லை! தியேட்டருக்கு வந்து விட்டதா என்பதும் தெரியவில்லை.
பெரிய நடிகர் நடித்த படம் என்றால் யாரும் சொல்ல தேவை இல்லை. நமக்கு செய்தி கிடைத்துவிடும்! ஆனால் பெரிய நடிகர்கள் நடிக்காத ஒரு படத்திற்கு எந்த செய்தியும் நமக்குக் கிடைப்பதில்லை! கல்வி அமைச்சர் சொன்ன பிறகு தான் இப்படி ஒரு படம் வந்திருக்கிறது என்பதே நமக்குத் தெரியும். இப்போதும் கூட இந்தப் படத்தின் நிலை என்ன வென்று நமக்குத் தெரியவில்லை.
தமிழ் நாட்டில் ஒரு படம் பேசப்படவில்லை என்றால் இங்கும் அந்தப் படம் பேசப்படாது. பேசக்கூடாது என்பது தான் அவர்களது நிலை. நல்லது எதுவும் தமிழ் நாட்டு மக்களிடம் போய்ச் சேரக் கூடாது என்பதில் அங்குள்ள ஊடகங்கள் எச்சரிக்கையாக இருக்கின்றன. அங்கு ஊடகங்கள் என்ன சொல்லுகிறார்களோ அதைத்தான் நாமும் இங்கு பின்பற்றுகிறோம்! ஒருவேளை தமிழ்நாட்டுக் கிராமப் புறங்களில் படம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கக் கூடம்.
கல்வி அமைச்சர் இன்னொரு கருத்தையும் கூடவே கூறியிருக்கிறார். இந்தப் படத்தை ஆசிரியர்களும், மாணவர்களும், பெற்றோர்களும் பார்க்க வேண்டும் என்பதாக அறிவுறித்தியிருக்கிறார். அப்போதே ஒரு பதிலும் வரும்: அமைச்சு பணம் கொடுத்தால் நாங்கள் படம் பார்க்க தயாராக இருக்கிறோம்!" என்பதாக!
இப்படி பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் சேர்ந்து பார்த்த படம் என்றால் அந்தக் காலத்தில் "ஔவையார்" படம் என்று சொல்லலாம். அதன் பின்னர் ஏதேனும் படம் உண்டா என்று எனக்குத் தெரியவில்லை.
நமது நாட்டைப் பொறுத்தவரை இந்தப் படம் வந்த நேரம் சரியில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. ஜாவி எழுத்தை அறிமுகப்படுத்த கல்வி அமைச்சர் முனைந்து நிற்கிறார். இந்த திணிப்பை இந்திய சமூகம் எதிர்த்து நிற்கிறது. ஜாவி எழுத்தைப் புகுத்துவதற்கு இந்த "ராட்சசி" திரைப்படத்தை தனக்குச் சாதகமாகப் பயன் படுத்துகிறாரோ என்று ஐயத்தை ஏற்படுத்துகிறது! அதனாலேயே யாரும் எந்த அறிக்கையும் இதுவரை வெளியிடவில்லை. அது பற்றி பேசவுமில்லை.
அதுவும் தமிழ் படத்தை பிற இனத்தவர் ஒருவர் புகழ்கிறார் என்றால் நம் ஆசாமிகள் செய்கின்ற சேஷ்டைகளை எல்லாம் பார்த்திருக்கிறோம். ஆனால் இந்தப் படத்திற்கு எந்த ஆரவாரத்தையும் காணோம்!
ஏன் நான் கூட கல்வி அமைச்சர் சொன்னது பற்றி பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. காரணம் சொன்ன நேரம் அப்படி. நாம் வேண்டாம் என்று சொல்லுவதை அவர் வேண்டும் என்று திணிக்கப் பார்ப்பதை இந்தப் படத்தை வைத்து உதாரணம் காட்டுகிறார்! செய்தே முடிப்பேன் என்பது அவர் வாதம். செய்யக் கூடாது என்பது நமது வாதம்.
அதற்கு ஏன் ராட்சசி?
No comments:
Post a Comment