Saturday 21 September 2019

பதவி ஒப்படைப்பு...!

அன்வார் இப்ராகிம் பிரதமராக பதவி ஏற்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என பிரதமர், மகாதிர் அறிவித்திருக்கிறார்.

சமீபத்தில் புளூம்பெர்க் செய்தி நிறுவனத்திற்குக் கொடுத்த ஒரு நேர்காணலில் தான் அடுத்த வருடம், மே மாத வாக்கில் பிரதமர் பதவியை ஏற்கக் கூடும் என்று கூறியிருந்தார் அன்வார் இப்ராகிம்.

அதற்கான பதில் தான் மேலே டாக்டர் மகாதிர் கூறியது. இது வரை  எல்லாமே சரி தான்.  சந்தேகப்பட ஒன்றுமில்லை. 

ஆனால் டாக்டர் மகாதிர் சொன்னதை  அவருடைய கட்சியினர் ஏற்றுக் கொள்ளுவார்களா?  அதுவும் முக்கியம். இவர் ஒன்று சொல்லவும் அவர் கட்சியினர் ஒன்று சொல்லவும் - அது தான் இன்று வரை நடந்து வருகிறது!  அப்படி வேறு ஒரு கருத்து அவர் கட்சியினரிடமிருந்து வருமானால் நிச்சயமாக, பொது மக்களைப் பொறுத்தவரை,  அதற்குக் காரணம்  டாக்டர் மகாதிரின் தூண்டுதல் தான் என்று தான் நினைப்பார்கள்! அதில் சந்தேகம் இல்லை.

அதே சமயத்தில் பாஸ் கட்சியினரும் சரி, அம்னோ கட்சியினரும் சரி அவர்களும் ஏதாவது ஒன்றைச் சொல்லி மக்களைக் குழப்புவார்கள்! அங்கே இன்னொரு கோஷ்டியும் உண்டு.  அவர்கள் பக்கத்தான் அரசாங்கம் எதைச் செய்தாலும் அதனை ஊதி ஊதி ஓரு பிரச்சைனையாக உருவாக்குவார்கள்!  இவர்கள் நஜிப்பின் ஆதரவாளர்கள்.  நாட்டில் நடப்பது எதுவுமே சரியில்லை என்பது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவார்கள்!  

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டியவர் பிரதமர், டாக்டர் மகாதிர் தான். "விரைவில் அறிவிக்கப்படும்" என்பதற்குச் சொல்லும்படியான கால வரையரை இல்லை. அதனை எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். இந்த மாதமே என்று சொல்லலாம்.  அடுத்த மாதம் என்றும் சொல்லலாம். அடுத்த ஆண்டு, அதற்கு அடுத்த ஆண்டு - இப்படியும் அர்த்தப் படுத்திக் கொள்ளலாம். ஆக, அந்த வார்த்தைக்கு ஒரு முடிவு இல்லை!

இப்படி வேறு வேறு கோணத்தில் மக்களைப் போட்டுக் குழப்புவதைவிட டாக்டர் மகாதிர் உருப்படியாக ஒன்றைச் செய்யலாம. எந்த தேதி, எந்த மாதம் பிரதமர் பதவி அன்வாரிடம் ஒப்படைக்கப்படும் என்பதை மக்களுக்கு அறிவித்து விடலாம்.  அப்படி செய்யும் போது யாரும் எதுவும் பேச முடியாது! தேவையற்ற பேச்சுக்கள் எழாது!

பிரதமர் பதவி எப்போது அன்வாரிடம் ஒப்படைக்கப்படும் என்பதை பிரதமர் அறிவித்துவிட வேண்டும்.  "நான் சொன்னபடியே பிரதமர் பதவியை அன்வாரிடம் ஒப்படைப்பேன்!"  என்று மீண்டும் மீண்டும் அவர் சொல்லும் போது - அப்படி பேசுவதே சந்தேகத்திற்கு இடமளிக்கிறது!

நாம் சொல்ல வருவதெல்லாம் பிரதமர் அவர்களே, நீங்களும் ஒரு தேதியைக் குறிப்பிட்டு பிரச்சனைக்கு ஒரு தீர்வு காண முயற்சி செய்யுங்கள்!  இழுபறி வேண்டாம், என்பதே நமது வேண்டுகோள்!

No comments:

Post a Comment