Thursday 26 September 2019

குடியிருக்கும் வீட்டுக்கும் ஆபத்தா..!


"குடியிருக்கும் வீட்டுக்கு "கொள்ளி" வைப்பதா?" என்னும்  செய்தியைப் படித்த போது உண்மையில்  வேதனையடைந்தேன்.

எனக்குத் தெரிந்து இது இரண்டாவது சம்பவம். நான் குடியிருக்கும் தாமானிலும் இப்படி ஒரு சம்பவம் நடந்தது. அது "ஆலோங்" பிரச்சனை  என்கிறார்கள்.  

வாங்கிய பணத்தை வசூலிக்க முடியவில்லை என்றால் இப்படி சம்பவங்கள் நடக்கின்றன. அல்லது இரகசிய கும்பல்கள் இது போன்ற அராஜகத்தை அரங்கேற்றுகின்றன.

மிகவும் வருந்தக்க விஷயம்.  இரகசியக் கும்பல்கள் என்றால் சீனர்களை மிஞ்ச ஆளில்லை.  அவர்கள் கூட இது போன்ற காரியங்களைச் செய்ததாக படித்ததில்லை.

ஆனால் இந்திய இளைஞர்கள் செய்கின்ற காரியங்கள், அட்டகாசங்கள் நம்மை கலங்க வைக்கின்றன. இந்த அளவுக்கு அவர்கள் வன்முறைகளில் இறங்குவதற்கு என்ன காரணமாக இருக்கும்? சினிமா படங்கள் தான் என்று எத்தனை நாளைக்கு நாம் சொல்லிக் கொண்டிருக்கப் போகிறோம்?  அல்லது சீனர்கள் வாங்கிக் கொடுக்கும் சில பீர் போத்தல்களுக்காக இவர்கள் இப்படிச் செய்கிறார்களா என்பதும் நமக்குப் புரியவில்லை.

சீனர்களைப் பற்றி நமக்குத் தெரியும். இந்திய இளைஞர்களை பின்னணியில் இருந்து இயக்குபவர்கள் இவர்கள்.  அவர்கள் சொல்லுவதை வேத வாக்காக எடுத்துக் கொண்டு இந்திய இளைஞர்கள் செயல்படுகிறார்கள்.  

ஒரு வீட்டை எரிக்கும் அளவுக்கு இந்திய இளைஞர்கள் துணிய மாட்டார்கள் என்பது நமக்குத் தெரியும்.  ஆனால் அது நடந்திருக்கிறது.

ஒரு வீட்டை வாங்குவதற்கு இந்தியர்கள் எவ்வளவு சிரமத்திற்கு உள்ளாக்கப்படுகிறார்கள்  என்பதை நாம் அறிந்திருக்கிறோம்.  வங்கிகள் அவ்வளவு எளிதில் இந்தியர்களுக்குக் கடன் கொடுப்பதில்லை. கிடைத்த கடனை வங்கிகளுக்குத் திரும்ப கட்டுவதற்கு எத்தனையோ இடர்ப்பாடுகள், இடைஞ்சல்களைப் பெற்றோர்கள் எதிர் நோக்குகின்றனர். 

இந்த சூழலில் கொஞசம் கூட சம்பந்தப்படாத எவனோ ஒருவன் ஒரு வீட்டுக்குத் தீ வைக்கின்றான் என்றால் இதனை நம்மால் ஜீரணிக்க முடியவில்லை.  குடிகாரப் பயல்கள் அவர்களுக்குள்ளேயே தங்களது பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர அதனை விட்டு வீட்டை எரிக்கும் அளவுக்குத் துணியக் கூடாது. தங்களது மாதத் தவணையையே கட்ட சிரமப்படும் பெற்றோர்கள் இப்போது என்ன செய்வார்கள்?

இதன் எதிரொலி என்ன தெரியுமா?  வருங்காலங்களில் வங்கிகள் இந்தியர்களுக்கு வீட்டுக் கடன் கொடுக்க துணிய மாட்டார்கள். 

இந்த அளவுக்கு இந்திய இளைஞர்கள் வன்மம் நிறைந்தவர்களாய் இருக்க என்ன காரணம்?  குடும்பம் தான் காரணம்.  குடும்பம் குடிகார கூட்டமாக இருந்தால் பிள்ளைகளும் குடிகாரர்களாய்த்தான் இருப்பார்கள். குடி தான் அவர்களைக் கெடுக்கிறது.

குடிகாரர்களுக்குத் தான் இப்போது நாம் கொள்ளி வைக்க வேண்டும்! இல்லாவிட்டால் சிறை சாவுகள் எல்லாம் சரி என்று தான் சொல்ல வேண்டி வரும்!

No comments:

Post a Comment