Tuesday 3 September 2019

யாருக்கு என்ன பயன்?

பொதுவாக அடுத்த தேர்தலுக்கான   வேலைகளை இப்போதே  ஆரம்பித்து விட்டனர் அம்னோ - பாஸ் கட்சியினர்!

அவர்களிடம் இப்போது கையில் இருக்கும்  ஒரே ஆயுதம் மலாய் இனமும் இஸ்லாம் மதமும்ததான்.  பாஸ் எல்லாக் காலங்களிலும் இதனை வைத்துத் தான் அரசியல் செய்து கொண்டு வருபவர்கள்.   அம்னோவினர் அவ்வப்போது தொட்டுக் கொள்ளுபவர்கள்!  இப்போது அவர்களும் இதுவே முழு நேர வேலையாக ஏற்றுக் கொண்டனர்!

அம்னோ கட்சியினரால்  இப்போது  எதையும்  பேச இயலாது. காரணம் நாட்டை சுரண்டியவர்கள் என்கிற  அவப்பெயர் அவர்களை வீட்டு நீங்க இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும் என்று தெரியாது.

ஆக இப்போதைக்கு மிக எளிதான வழி இஸ்லாம்  அல்லது இனத் துவேஷத்தை எழுப்புவது தான்! 

இப்போது புதிதாக ஒன்றைக் கண்டுபிடித்து விட்டார்கள்.  அம்னோவும், பாஸும் சேர்ந்து சீனர்களின் பொருட்களைப் புறக்கணியுங்கள் என்பது தான்.! அவர்களாக இதனைச் செய்ய மாட்டார்கள்.   அவர்களுக்கென்று  சில அரசு சாரா இயக்கங்களைப் பணம் கொடுத்து வளர்த்து வரும் அவர்கள்,  அவர்கள் மூலமாக அவர்களது எதிர்ப்புக்களைக் காட்டுவார்கள்!  இது தான் இப்போது தொடர்ந்து நடந்து கொண்டு வருகிறது!

அவர்கள் நோக்கமெல்லாம் அரசாங்கத்தை மலாய்க்காரர்கள் வெறுத்து ஒதுக்க வேண்டும் என்பது தான்.  இந்த வெறுப்பு எப்படி வந்தது, எதனால் வந்தது என்பதையெல்லாம் மக்கள் அறிந்திருக்கிறார்கள்.

ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த வெறுப்பு, புறக்கணிப்பு என்பதெல்லாம் மேல் மட்டத்தில் பேசப்படுவதோடு சரி.  அவர்கள் கீழ் இறங்கி வர மட்டார்கள்!  கீழே உள்ளவர்களும் மேல் மட்டத்தில் போகப் போவதில்லை! 

மேல் மட்டத்தில்  உள்ளவர்கள் சீனர்கள் உதவி இல்லாமல் வாழ முடியாது. சிறந்த எடுத்துக் காட்டு: நஜிப்-ஜோ லோ கூட்டணி!    அத்தோடு அது நின்று போகப் போவதில்லை.  தொடர்வதற்கு எல்லா சாத்தியங்களும் உண்டு!

சும்மா,  தேவை இல்லாமல் சீனர்களின்  பொருட்களைப் புறக்கணியுங்கள், முஸ்லிம் அல்லாதாரின் பொருட்களைப்  புறக்கணியுங்கள் என்பதெல்லாம் வெறும் அரசியல் பேச்சு! ஒரு வட்டத்திற்குள் இருந்து கொண்டு இனத் துவேஷம் பேசலாம். முக நூலில் பிற இனத்தவரை, பிற மதத்தினரை சாடலாம். அதன் மூலம் நாட்டில் "கலவரம்"  என்கிற பயத்தை ஊட்டலாம். 

மற்றபடி இது போன்ற பேச்சுக்கள் மூலம் எதுவும் நடக்கப் போவதில்லை! யாருக்கும் பயன்படப் போவதில்லை.

இதனால் யாருக்கும் பயனில்லை என்று நமக்குப் புரிகிறது! ஆனால் அரசியல்வாதிகளுக்கு  அது எப்போது புரியுமோ!

No comments:

Post a Comment