Friday 6 September 2019

சொல்லி வருவதல்ல மனித நேயம்...!

நாளிதழில் ஒரு செய்தியைப் படித்த போது மனதில் பட்டது" "சொல்லி வருவதல்ல மனித நேயம்!"

நம்மைச் சுற்றி பாருங்கள். இந்தியர்களை முன்னேற்ற எத்தனை எத்தனை இயக்கங்கள், மன்றங்கள், சங்கங்கள்!  சொல்லி மாளாது!  எல்லாம் சேர்ந்து இந்திய சமுக்கத்தினரை முன்னேற்றப் பாடு படுகிறார்களாம்!

சென்ற பாரிசான் கட்சியின் ஆட்சி காலத்தில் இந்திய இயக்கங்களுக்கு அள்ளி அள்ளி மானியங்கள் கொடுக்க ஆரம்பித்த பிறகு மிகப் பலர் "தொண்டு"   செய்வதில் ஆர்வம் காட்டினர்.  இப்போது இந்த பக்காத்தான் ஆட்சியிலும் தொடர்கின்றனர்.

தொண்டு என்பது இப்படி "பணம்" கொடுத்தால் தான் வரும் என்பதை நான் நம்பவில்லை.

தைப்பிங் நகரில் ஒரு பெரியவர் கடந்த 25 ஆண்டுகளாக பள்ளி மாணவர்கள் சாலையைக் கடப்பதற்கு உதவியாக இருந்து வருகிறார்.

அவரது பெயர் மாதவன். வயது 69.  ரேலா தொண்டூழியப் படையின் பணியில் உள்ளவர்.  பள்ளி ஆரம்பிக்கும் நேரம் காலை 7.45 மணிக்கு பள்ளி முன்வளாகத்திற்கு வந்து விடுவார். பிள்ளைகள் அனைவரும் பள்ளிக்குள் போன பின்னர் அத்தோடு காலை நேரப்பணி முடிந்து விடும். பின்னர் பிற்பகல் பள்ளி விடும் நேரம் 1.30 மணிக்கு  மீண்டும் அதே சாலைப் பணி. பிள்ளைகள் அனைவரும் சாலையைக் கடந்து வீடுகளுக்குப் போக ஆரம்பித்து விடுவர்.  மாணவர்கள் அனைவரும் களைந்த பின்னர் அவருடைய வேலையும் முடிந்தது.

பார்ப்பதற்கோ, கேட்பதற்கோ எளிதான  பணியாகத் தோன்றும். ஆனால் ஒன்றை  யோசியுங்கள்.  அவரது மற்ற வேலைகளை விட்டுவிட்டு அந்த குறிப்பிட்ட நேரத்தில் அங்கு வந்து விடுவார். தனது சொந்த வேலைகளைத் தியாகம் செய்கிறார்.  அந்த நேரத்தில் மழை பெய்யலாம், பனி பொழியலாம்.  புகை, புகைமூட்டம் கண்களை மறைக்கலாம்.  கார்கள் அபாயகரமாக வரலாம்.  அவரை மோதலாம். இப்படி பல அபாயங்கள். 

இருப்பினும் அந்தப் பெரியவர் அதனை விரும்பி செய்கிறார். அது பிள்ளைகள் மேல் அவருக்கு உள்ள பாசம். எல்லாப் பிள்ளைகளும் பள்ளிக்கு வர வேண்டும்.  பின்னர் பத்திரமாக வீடு போய் சேர வேண்டும். அந்த நேரத்தில்  சாலையைக் கடக்க அந்தப் பிள்ளைகளுக்கு உதவியாக தான் இருக்க வேண்டும். அது போதும். பிள்ளைகளுக்கு உதவுவதில் ஒரு நிம்மதி. வேறு என்ன வேண்டும்?

நாம் இந்த உலகில் வாழும் வரை எதையோ சாதிக்க வேண்டும் என்பதற்காக பெரிய பெரிய காரியங்களை நோக்கி செல்ல வேண்டும் என்பதில்லை. நம்மைச் சுற்றி சின்ன சின்ன காரியங்களைக் கூட விரும்பிச் செய்யலாம். 

தொண்டு என்பது பணம் கொடுத்தால் தான் வரும் என்பதெல்லாம் ஒன்றுமில்லை.  அது தானாக வந்தால் தான் தொண்டு. பணம் கொடுத்து வந்தால் அது அரசியல்!

No comments:

Post a Comment