Saturday 7 September 2019

எந்த நேரத்திலும் வெளிப்படலாம்....!

சமீப காலமாக இந்தியர்களிடையே அதிகமாக அடிப்பட்ட பெயர் ராணு மரியா மோண்டல்!

மேற்கு வங்காளத்தில், ரயில் நிலையமொன்றில் பாடி பிச்சை எடுத்துக் கொண்டிருந்த ஒரு பிச்சைக்கார பெண்மணி.

ஆனால் ஒரு வித்தியாசம். அவர் "ஐயா சாமி! அம்மா பிச்சை போடுங்கம்மா!" என்று யாரிடமும் கையேந்தி நிற்கவில்லை. அவரிடம் பாடும் திறமை இருந்தது.  அந்தக் காலத்து லதா மங்கேஷ்கர் பாடல்களை அவர் பாடிக் கொண்டிருப்பார். அவர் பாடல்களைக் கேட்டு அவருக்குப் பிச்சைப் போட்டு விட்டுப் போவார்கள் ரயில் பயணிகள். 


 இந்த நேரத்தில் பயணி ஒருவர் அவர் பாடுவதைக் கேட்டு அசந்து போனார். அவரது குரலை ஒலிப்பதிவு செய்து முகநூலில் போட்டு தனது வியப்பை வெளிப்படுத்தினார். அங்கிருந்து அது பாலிவூட் வரை பரவி இப்போது ராணுவை இந்திப் படங்களில் பின்னணிப் பாடும் அளவுக்கு உயர்த்தியிருக்கிறது! இப்போது பல நிகழ்ச்சிகளிலும் பாடி வருகிறார்!

ராணு இத்தனை ஆண்டுகள் யாரும் கவனிப்பாரற்று ஓர் அனாதை போல் வாழ்ந்து வந்தார். பெற்ற மகளும் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் "இருந்தா செலவு!" என்று தாயாரை ஓரங்கட்டிவிட்டுப் போய்விட்டார். இப்போது மகள் "இருந்தா வரவு!" என்று அம்மாவைத் தேடி கண்டுபிடித்து குடும்பத்தோடு அம்மாவிடம் ஒட்டிக் கொண்டார்!  இது தான் இன்றைய உலக வழக்கு! அதைத்தான் கவிஞர் வாலி பாடி விட்டுப் போனார்: "ஒரு மானம் இல்லை அதில் ஈனம் இல்லை அவர் எப்போதும் வால் பிடிப்பார்!"
பரவாயில்லை! அம்மா வால் தானே!

ராணு எத்தனையோ ஆண்டுகள் பாடி பிச்சை எடுத்தவர். அவர் பாடித்தான் பிச்சை எடுத்தார். அவர் பாடுவதை எந்தக் காலத்திலும் நிறுத்தவில்லை. அந்த பாடும் திறமை தான் அவரை உயர்த்தியிருக்கிறது. அவர் அறியாமலே அந்த பாடும் கலை அவரோடு இணைந்திருக்கிறது.

எல்லாமே அப்படித்தான்.  யாரிடம் என்ன திறமை இருக்கிறது என்பதை நாம் கண்டு பிடிக்கும் வரை நமக்குத் தெரிவதில்லை.

ராணுவிடம் ஒளிந்திருந்த அந்தத் திறமையைக் கண்டு பிடிக்க ஒரு ரயில் பயணிக்குத் தெரிந்திருந்தது.

அது போல நமது திறமைகளும் வெளிப்பட ஏதாவது ஒரு பயணிக்குத் தெரியாமலா போய்விடும்? அது வரை நமக்குத் தெரிந்த கலையை கைவிடாமல் தோடர்வோம்!

No comments:

Post a Comment