Saturday, 14 September 2019
பத்து வயது மலையரசி!
பத்து வயதில் மலையேறுவதில் சாதனைப் படைத்திருக்கிறார் செலினா காவஜா என்கிற பாக்கிஸ்தானிய சிறுமி ஒருவர்.
வயது தான் பத்தே தவிர மலையேறுவதில் அவர் மலை அரசி என வர்ணிக்கப்படுகின்றார். சிறு வயது முதலே மலை ஏறுவதில் பல சாதனைகளைப் புரிந்தவர் இந்தச் சிறுமி.
கடைசியாக அவர் பாலுஸ்தானிலுள்ள 7,027 மீட்டர் ஸ்பேண்டிக் மலை உச்சியை அடைந்த இளம் விராங்கனை என்னும் பாராட்டைப் பெறுகின்றார். இதற்கு முன்னர் 5,765 மீட்டர் கியுசார் மலையையும் மற்றும் 6,050 மீட்டர் மிங்லிசார் மலையையும் தனது ஒன்பதாவது வயதில் ஏறி சாதனைகளைப் படைத்திருக்கிறார் செலினா.
தனது எட்டாவது வயதிலேயே மலை ஏறும் பயிற்சிகளில் ஈடுபட்டுவிட்டார் இந்த சிறுமி. 3000 மீட்டர் உயரமுள்ள மிராஞ்சி மலையை 45 முறைகளாவது ஏறியிருக்கிறேன் என்கிறார். அதே போல 4000 மீட்டர் உயரமுள்ள மாக்ரா மலையை குறைந்தது மூன்று முறைகளாவது ஏறியிருக்கிறார்.
அடுத்த இலக்கு மிகக் குறைந்த வயதில் ஏவரஸ்ட் மலையை ஏறிய சிறுமி என்று சாதனை புரிய வேண்டும் என்னும் நோக்கத்தில் இருக்கிறார் செலினா. அவர் வெற்றி பெறுவார் என்பது உறுதி.
இப்படி இளம் வயதிலேயே மலைகளை ஏறிக் கொண்டிருக்கும் இந்த சிறுமியின் உடல் நலனில் பாதிப்பு ஏற்படாதா? அதற்கு அவரின் தந்தை "இல்லை! எந்த பாதிப்பும் வராது!" என்கிறார். "செலினா ஓர் இருபது வயது இளைஞரை விட இன்னும் திடகாத்திரமாக இருக்கிறார்" என்கிறார்.
செலினாவின் தந்தை ஓர் உடற் பயிற்சியாளர். அவரது உடற் பயிற்சி மையத்தில் செலினா தினசரி பயிற்சிகளை மேற்கொண்டு தனது உடம்பை இரும்பாக வைத்திருக்கிறார்!
மலைகளை ஏறி சாதனைகளைப் படைத்துக் கொண்டிருக்கும் செலினாவின் வருங்காலக் கனவு என்ன? அவர் விலங்குகளை நேசிப்பவர். அதனால், தான் ஒரு கால்நடை மருத்தவராக வர விரும்புவதாகக் கூறுகிறார்.
ஆக, மலைகள், விலங்குகள் அது தான் இப்போதைய கனவு. நாளை மாறலாம்! வயது ஏறும் போது இலட்சியங்கள் மாறலாம்!
மலைகளின் அரசிக்கு நமது வாழ்த்துகள்!
Labels:
கோடிஸ்வரர்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment