Tuesday 10 September 2019

முதல் பழங்குடி பெண்!

                                    
                                             Anupriya Mathumitha Lakra

 பழங்குடி பெண் ஒருவர் விமான ஓட்டுநராக மாறியிருக்கிறார்.

இந்தியா, ஓடிசா மாநிலத்தில் உள்ள  மல்கன்கிரி  மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடி பெண் ஒருவர் - பழங்குடியினரில் முதல் பெண்மணியாக - விமான ஓட்டுனராக தனது பயணத்தை  ஆரம்பித்திருக்கிறார். ஓர் தனியார் விமான நிறுவனமான இண்டிகோ ஏர்லைன் ஸில்  துணை விமானியாக தனது பணியை இம்மாதம் தொடங்குகிறார்.

மாவோ கம்னிஸ்டுகளால் சூழப்பட்ட ஒரு மாவட்டமான மல்கன்கிரி பகுதியில் மட்டும் அல்ல ஓடிஷா மாநிலத்தின் முதல் பழங்குடி பெண் விமானியாகத் திகழ்கிறார் அனுபிரியா மதுமிதா லக்ரா. 

அனுபிரியாவுக்கு இப்போது வயது 27.  சிறு வயது முதல் விமானத்தில் பறக்கும் ஆசையைக் கொண்டிருந்தார் அனுபிரியா. அதுவே விமானியாக ஆக வேண்டும் என்னும் நிலைக்குக் கொண்டு சென்று விட்டது! பெரும் செலவில் படிக்க வேண்டிய ஒரு சூழல். பெற்றோர்கள் பெரும் அளவில் கடன்பட்டு படிக்க வைத்து அனுவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்திருக்கின்றனர்.

ஒன்றை நினைவில் வையுங்கள். அவர்கள் பழங்குடியினர்.  கடன் அவ்வளவு சுலபமாக வராது! ஆயினும் எல்லாப் பெற்றோர்களைப் போலவே அவர்களும் தனது மகளின் ஆசையை  எப்பாடு பட்டாவது நிறைவேற்ற உறுதி பூண்டனர் என்பது தான் கவனிக்கத் தக்கது.

அவரது தாயார் என்ன சொல்லுகிறார்? பெண் பிள்ளைகளைப் படிக்க வையுங்கள்; அவர்கள் விரும்புவதை படிக்க வையுங்கள். எனது மகள் மற்ற பெண்களுக்கு எடுத்துக் காட்டாக இருப்பது எனக்குப் பெருமையாக இருக்கிறது என்கிறார்.

நிறையவே அவர்கள் பெருமைப் படலாம். ரயில் கூட இல்லாத ஓர் ஊரிலிருந்து விமானத்தை இயக்கும் அளவுக்கு ஒரு பெண் உயர்ந்திருக்கிறார் என்றால் அது சாதாரண விஷயம் அல்ல. அதுவும் பழங்குடி மக்களின் - ஓடிஷா மாநிலத்தின் - முதல் பழங்குடி பெண்ணாக என்பது பெருமை தான்.

அதிகமான பழங்குடியினரைக் கொண்ட மல்கன்கிரி மாவட்டத்திலிருந்து இனி அதிகமான பெண்கள் விமானிகளாக அல்லது தாங்கள் விரும்புகின்ற துறையில் நிபுணர்களாக வருவதற்கு ஒரு பாதையைப் போட்டுக் கொடுத்திருக்கிறார் அனுபிரியா. 

யாரும் எந்தச் சூழலிலும் முன்னேறலாம் என்பதற்கு அனுபிரியா ஓர் சான்றாக முன் நிற்கிறார்!

கனவு காணுங்கள்! கனவு நிறைவேற கனவு காணுங்கள்!

No comments:

Post a Comment