Sunday 1 September 2019

இது என்ன சவடால்...!

அம்னோ உச்சமன்ற உறுப்பினர் ஒருவர் பக்காத்தான் அரசாங்கத்திற்கு ஓரு சவால் விட்டிருக்கிறார்!

"வருகின்ற 15-வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் மீண்டும் அரசாங்கம் அமைக்கும் என்றால் அது வரை ஏன் காத்திருக்க வேண்டும்?  இப்போதே நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு தேர்தலை நடத்துங்களேன்!" 

இது தான் அவரது சவால். இது போன்ற சவால்களை எல்லாக் காலங்களிலும் அரசியல்வாதிகள் நமது காதுகளில் ஓதிக் கொண்டு தான் இருக்கிறார்கள்!  ஆனால் இதுவரை எந்தக் கட்சியும், எந்த அரசாங்கமும், தொங்கும் அரசாங்கமாக இருந்தாலும் கூட அப்படியெல்லாம் நாடாளுமன்றத்தைக் கலைத்ததாக சரித்திரம் இல்லை!  இது போன்ற கேள்விகளை அம்னோ அரசாங்கத்தைக் கூட எதிர்க்கட்சிகள் கேட்டிருக்கின்றன!

நடக்காத ஒன்றைப் பற்றி  இப்படி ஓயாமல் அரசியல்வாதிகள் அறைகூவல் விடுகின்றனரே இதனை நாம் எப்படி எடுத்துக் கொள்ளுவது? அதுவும் இது போன்ற சவால்கள் அம்னோவிடமிருந்து வருகிறது என்றால் .......?  நிச்சயமாக கோபம் வரத் தான் செய்யும்!

நாட்டை நாசமாக்கிய ஒரு கட்சி, நாட்டை திவாலாக்கிய ஒரு கட்சி, ஒரு தனிப்பட்ட மனிதர் தனது பேராசையால் நாட்டையே பிற நாட்டவருக்கு அடகு வைத்த ஒரு கட்சி  இப்படி ஊழலலையே  பிரதான நோக்கமாக   கொண்ட ஒரு கட்சியைச் சேர்ந்தவர்கள் இப்படி சவால் விடுவதைப் பார்க்கும் போது அவர்கள் நினைப்பதெல்லாம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் எவ்வளவு சம்பாதிக்கலாம்  என்பதை மட்டும் தான்!

அவர்கள் செய்த குற்றங்களையெல்லாம் கொஞ்சம் கூட  வெட்கமே இல்லாமல் - அரசியல்வாதிகளுக்கு சூடு, சொரணை எல்லாம் இருக்காது - நடக்காது என்று தெரிந்தும் இவர்களுக்கு எவ்வளவு தெனாவெட்டு இருந்தால் இப்படியெல்லாம் சவால் விடுவார்கள்! 

யாருக்கு யார் சவால் விடுவது என்கிற விவஸ்தை வேண்டாமா? ஒரு நாட்டை ஆட்சி செய்ய, அந்த நாட்டின் மக்கள் வளமாக வாழ என்ன செய்ய வேண்டும் என்று அறியாத அறிவிலிகள் எல்லாம் சவால் விட்டால் நமக்கும் இரத்தம் கொதிக்கத் தான் செய்கிறது!

நடப்பு அரசாங்கம் தவறுகள் செய்யலாம். இல்லை என்று சொல்லவில்லை. ஏன் அடுத்த தேர்தல் வரை நீங்கள் பொறுத்துக் கொள்ள முடியாதா? இவர்கள் தவறு செய்தால் மக்கள் மீண்டும் உங்களைத்  தானே தேர்ந்தெடுப்பார்கள்! ஆனால் கனவு காணாதீர்கள்! பினாங்கில் உங்கள் ஜம்பம் பலிக்கவில்லையே! அது போல இங்கும் உங்கள் ஜம்பம் பலிக்காது!

சவால் விடுவதை விடுத்து மக்களின் நம்பிக்கையைப் பெற முயற்சி செய்யுங்கள்!

No comments:

Post a Comment