சென்ற கட்டுரையில் "பெருமை சேர்க்கும் தமிழ்ப்பெண்களில்" நமது ஆண்களால் கூட எட்ட முடியாத ஒரு பதவியில், உலகிலேயே உயரிய ஒரு பதவியில், இருக்கும் அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் அவர்களைப் பற்றி எழுதியிருந்தேன்.
இதோ, இன்று, டாக்டர் செலின் கவுண்டர் என்கிற ஒரு தமிழ்ப் பெண். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி ஜோ பைடன் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட - கொரோனா தொற்று நோய்க்கு எதிரான ஆலோசனைக் குழுவில் ஒருவராக அறிவித்திருக்கிறார். அது தான் அமெரிக்காவில் அவரது முதல் அறிவிப்பு.
இங்கே ஒரு விசேஷம் ஏன்னவென்றால் "வாஷிங்டனில் திருமணம்" என்னும் புத்தகம் அந்தக் காலத்தில் எப்படி பரபரப்பாக பார்க்கப்பட்டதோ அதே போல இப்போது "அமரிக்காவில் கவுண்டர்" என்று இந்த தமிழ்ப் பெண்ணைப் பற்றி பரப்பரப்பாக பேசப்படுகிறது.
நமக்கும் அது பெருமை தான். எந்த சமூகமாக இருந்தால் என்ன அவர் தமிழ்ப்பெண் என்பதில் சந்தேகமில்லை.
டாக்டர் செலின் கவுண்டர் அமெரிக்காவில் பிறந்தவர். அமெரிக்காவில் படித்தவர். மருத்துவத் துறையிலும் கல்வித் துறையிலும் சாதனைகள் பல புரிந்தவர். இப்போது அவருக்கு வயது 43.
அவரது தந்தையின் பெயர் ராஜ் நடராஜன் கவுண்டர். மேல் நாடுகளில் தங்களது பெயர்களில் தந்தையின் கடைசிப் பெயரை இணைத்துக் கொள்ளுவது வழக்கமான ஒன்று. அப்படித்தான் செலின் பெயரோடு கவுண்டர் என்பதும் ஒட்டிக் கொண்டது. தந்தையார் ஓரு பொறியியலாளர்.
இனி அவர் டாக்டர் செலின் கவுண்டர் என்று தான் அடையாளப்படுத்தப்படுவார்! அது அவர்களது நடைமுறை. செலினின் தாயார் பெயர் நோர்மாண்டி. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்.
அவரது தந்தையார் நடராஜ கவுண்டர் தமிழ் நாடு, ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி, பெரும்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர். டாக்டர் செலின் தனது பெரும்பாளையம் கிராமத்திற்கு நான்கு முறை சென்றிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. அங்கு அவர் தனது உறவுகளைச் சந்தித்திருக்கிறார். பேசி மகிழ்ந்திருக்கிறார்!
இப்போது பெரும்பாளையம் கிராமமே ஆனந்தத்தில் மூழ்கியிருக்கிறது. செலின் கவுண்டரின் புதிய நியமனத்திற்காக இனிப்புக்கள் வழங்கிக் கொண்டாடி மகிழ்கின்றது!
பெரும்பாளையம் உண்மையில் பெரிய பாளையம் தான். இன்னும் எத்தனை எத்தனை உயரிய தமிழர்களை உருவாக்குமோ என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ஒரு தமிழ் மகளை சான்றோன் எனக் கேட்டது முதல் தமிழ் உலகமே கொண்டாடுகிறது!
மன்னார்குடி கலகலக்கிறது! பெரும்பாளையம் சலசலக்கிறது!
No comments:
Post a Comment