Thursday 5 November 2020

காலத்தால் செய்த உதவி....!

 காலத்தால் செய்த உதவி சிறிதாக இருந்தாலும் தக்க நேரத்தில் செய்த உதவியாயிற்றே - அதற்கு  ஈடு இணையில்லை! 

தீ விபத்தில் ஒரு வீடு எரிந்து போனது. அது ஒரு துயரச் சம்பவம்.

வசதி மிக்க ஒருவரின் வீடு என்றால் அது பற்றி நாம் கவலையடைய வேண்டாம். ஆனால் அதுவே ஒரு சராசாரி மனிதர், ஏழை என்றே வைத்துக் கொள்ளுவோம். அவர்களுக்கு அது பேரிடி. பெரும் துயரம்.

இப்போதெல்லாம் பலர் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன் வருகின்றனர். அவர்களை நாம் வாழ்த்துகிறோம்.

அரசியல் கட்சிகள் அதனை வைத்து விளம்பரம் தேட முயல்கின்றனர். அதுவும் சரி தான். அரசியல் சார்பற்ற நிறுவனங்கள் பலர் பல வகைகளில் உதவுகின்றனர். அந்த ஆபத்து நேரத்தில் உதவுகிறார்களே அதுவே பெரிய காரியம். 

அரசியல் சார்பற்ற நிறுவனங்கள் அந்த குடும்பத்திற்கு அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாக உணவு பொருட்களை வழங்குகின்றனர். ஆனால் அதனையே அரசியல் கட்சிகளும் செய்வது தான் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

குறிப்பாக அரசியல் கட்சிகள் அரசாங்கத்தின் மூலம் பெரிய அளவில் மானியங்கள் பெறுகின்றனர். ஓர் ஏழையின் வீடு முற்றிலுமாக எரிந்து சாம்பலாகி விட்டால் முடிந்தவரை அவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க முன் வர வேண்டும்.

இதனை சமீபத்தில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் செய்து காட்டியிருக்கிறார். அவர் பாராட்டுக்குரியவர். தனிப்பட்ட முறையில் எங்களது கிளையின் சார்பில் உதவுகிறோம் என்கிற பெயரில் சும்மா அரிசி, பருப்பு வாங்கிக் கொடுத்துவிட்டு அவர்களுக்கு உதவுகிறோம் என்று விளம்பரம் தேடுவதைத் தவிர்க்க வேண்டும்.

அதற்குப் பதிலாக கிளை, சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர், மற்றும் அரசாங்க உதவி பெற்று  வீடு கட்டிக் கொடுத்தால் அந்த குடும்பத்தினருக்குப் பெரும் உதவியாக இருக்கும். வாழ்நாள் பூராவும் இந்தியர்கள் ஐந்துக்கும் பத்துக்கும் கை  ஏந்துபவர்கள் என்கிற எண்ணத்தை வளர்த்துக் கொண்டே போவது இந்த அரசியல் கட்சிகள் தாம்.  அதனைத்  தவிர்க்க முனைய வேண்டும். 

செய்யும் உதவி திருப்திகரமாக அமைய வேண்டும் என்பது தான் நமது  நோக்கம். 

தக்க நேரத்தில் செய்கின்ற உதவி பெரிய உதவி தான். அதனை நாம் மறுக்கவில்லை.  

அதுவே அவர்களுக்கு நீண்ட காலம் பயனுடைய உதவியாக இருக்க வேண்டும் என்பது தான் நாம் சொல்ல வருவது.

செய்யுங்கள். ஆபத்து அவசரத்துக்குக் கை கொடுங்கள். ஆனால் ஓர் அரசியல் கட்சியாக, பொது இயக்கமாக செய்யும் போது வலிமைமிக்க அரசியல்வாதிகளையும் பக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.  அப்போது தான் உங்கள் உதவி சம்பந்தப்பட்டோருக்கு பெரும் உதவியாக அமையும்.

இது காலத்தால் செய்த உதவி.  தக்க காலத்தில் செய்த உதவி, பாராட்டுக்குரியது!

No comments:

Post a Comment