நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதனாலேயே எதையும் பேசலாம் என்கிற எண்ணம் இப்போது வளர்ந்து கொண்டு வருகிறது!
சமீப காலங்களில் இதை வளர்த்து விட்டவர் புங் மோக்தார், சாபா கினாபாத்தாங் நாடாளுமன்ற உறுப்பினர். அவருக்குத் துணை போனவரகள் பாரிசான் கட்சியினர்.
அதனால் இப்போது நாவடக்கம் இல்லாமல் பேசுகின்ற ஒரு நிலைமை ஏற்பட்டுவிட்டது!
பிந்துலு நாடாளுமன்ற உறுப்பினர் தியோங் கிங் சிங் சுகாதார அமைச்சின் தலைமை இயக்குனர், டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லாவைப் பற்றி நாடாளுமன்றத்தில் சிறுமைப்படுத்திப் பேசியது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
கொரோனா தொற்றுலிருந்து நாட்டை மீட்க இன்று டாக்டர்கள் தான் முன் நிற்கின்றனர். அவர்களோடு சேர்ந்து சுகாதாராப் பணியாளர்களும் பெரும் அளவில் பங்கேற்கின்றனர். ஏன் சுகாதாராப் பணியாளார்களும் சரி, டாக்டர்களும் சரி பலர் தங்களது உயிரைத் தியாகம் செய்திருக்கின்றனர். வெளி நாடுகளிலும் சரி உள்நாட்டிலும் சரி இது தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கின்றது.
இந்த நேரத்தில் அவர்கள் உயிருக்குப் பயப்புடுகிறார்கள் என்று சொல்லுவதை அதிகப்பிரசிங்கத்தனம் என்று தான் சொல்ல வேண்டியுள்ளது.
இன்று நாட்டில் இந்த அளவுக்கு கொரோனா தொற்று பரவுவதற்கு யார் காரணமாக இருந்திருக்கிறார்கள்? கட்டுப்பாட்டில் இருந்த தொற்றை எப்படி இந்த அளவுக்குப் பரப்ப முடிந்தது? உண்மையைச் சொன்னால் நமக்கு அரசியல்வாதிகள் மேல் தான் அதிகக் கோபமுண்டு. இவர்கள் தங்களுடைய பதவிகளைத் தற்காத்துக் கொள்ள இந்த வியாதியை இன்னும் கூட பரப்பிக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஆக நமக்குத் தெரிந்தது ஒன்று தான். அடுத்த தேர்தல் வரை இந்த வியாதி நம்மைத் தொற்றிக் கொண்டு தான் இருக்கும்!
தங்கள் பதவியைத் தற்காத்துக் கொள்ள நோயைப் பரப்பும் அரசியல்வாதிகள் ஒரு பக்கம். நோயை விரட்டியடிக்க படாதபாடுபடும் டாக்டர்கள் ஒரு பக்கம்.
இந்த நேரத்தில் இப்படி ஒரு கருத்தை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறுகிறார் என்றால் நமக்குக் கோபம் வரத்தான் செய்யும்.
தலைமை இயக்குனரைக் குறை கூறுவது என்பது அனைத்துச் சுகாதாரப் பணியாளர்களையும் குறை கூறுவதாகும்.
யாகாவாரினும் நாகாக்க!
No comments:
Post a Comment