Monday 23 November 2020

நேர்மையற்ற அதிகாரிகள்!

 நேர்மையற்ற அதிகாரிகள் அதிகாரத்தில் இருந்தால் என்னன்ன நடக்கும் என்பதை சமீபத்திய குடிநுழைவுத்துறை கைது நடவடிக்கை மெய்ப்பித்திருக்கிறது!

அதிகாரத் துஷ்பிரயோகம் என்றால் அதில்  குடிநுழைவுத்துறை தான் முதன்மையானது என்பதில் சந்தேகமில்லை! அந்த அளவுக்கு அதிகார அத்து மீறல்கள்!

ஒருவர் குற்றப் பின்னணியோடு வேலையில் அமர்த்தப்பட்டிருக்கிறார். அது எப்படி சாத்தியம் என்பது நமக்குப் புரியவில்லை. ஆள் கடத்தல், கார்த் திருட்டு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டிருப்பவர்கள் கூட எளிதாக வேலையில் சேர வாய்ப்புக்கள் உண்டு என்பது ஓர் ஆச்சரியமான தகவல்.

அதை விட ஆச்சரியங்கள் இன்னும் நிறையவே இருக்கின்றன. அவர் பயன்படுத்திய கார்கள் நம்மை விழி பிதுங்க வைக்கின்றன. ரோல்ஸ் ராய்ஸ், முஸ்தாங், ஆவ்டி, ரேஞ் ரோவர் போன்ற கார்களை அவர் பயன்படுத்தியிருக்கிறார்!

ரோல்ஸ் ராய்ஸ் என்பது சாதாரண தொழிலதிபர் கூட பாவிக்க முடியாது என்பது நமக்குத் தெரியும்.   பெரும் தொழிலதிபர்கள் கூட பெரும்பாலும் பாவிப்பதில்லை. அவர்களிடம் பணம் இல்லை என்று சொல்ல முடியுமா? பணம் உண்டு.  ஆனால் மெர்ஸிடிஸ்  கார்களே போதும் என்று திருப்தி அடைபவர்கள்.

ஆனால் ஓர் அதிகாரி, அரசாங்கத்தில் பணி புரியும் ஓர் அதிகாரி, அவருக்கு எப்படி இந்த அளவுக்குத் துணிச்சல் வந்தது, பணம் வந்தது  என்பது நமக்குப் புரியவில்லை!  எப்படியும் ஒரு நாள் இது வெளிச்சத்துக்கு வரும் என்பது தெரியாத அளவுக்கு அவர் என்ன ஒன்றும் அறியாதவரா! ஆச்சரியம்!  ஆச்சரியம்!

அதைவிட இன்னும் கொடுமை அந்த அதிகாரி குண்டர் கும்பல் நடவடிக்கைகளிலும் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது!

பொது மக்கள் என்னும் முறையில் நாம் ஒரு முடிவுக்கு வரலாம். இப்படி ஒரு மனிதர் வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கிறார் என்றால் அவருக்கு பலம் வாய்ந்த அரசியல் பின்னணி இருக்க வேண்டும். அப்படிப் பட்டவர்கள் தான் இப்படியெல்லாம் ஏதோ ஒரு குறுக்கு வழியில் உள்ளே புகுந்து விடுகிறார்கள்!

ஆனாலும் என்ன செய்ய? அரசியல் அதிகாரம் மிகவும் சக்தி வாய்ந்தது! எதிர்த்து நின்றாலும் அதனைத் தவிடுபொடியாக்கி விட அரசியல்வாதிகளால் முடியும்! அதற்காக நாம் வாய் மூடி மௌனியாக இருந்து விட முடியாது. நமது எதிர்ப்பை நாம் பதிவு செய்கிறோம்.

நேர்மையற்ற அதிகாரிகள் நாட்டின் அவமானச் சின்னங்கள்!

No comments:

Post a Comment