Monday 23 November 2020

ஏன் நம்மிடம் நேர்மை இல்லை?

 நாம் எல்லாருமே நம்மைப் பார்த்து நாமே கேட்க வேண்டிய கேள்வி இது.    

ஏன் நம்மிடம்  நேர்மை என்பது குறைந்து வருகிறது?  நாம் என்பது மலேசியர் அனைவரும் தான்.

தேசிய மிருகக்காட்சி சாலை, நமக்கு  "ஊழல்" வரிசையில் வந்த இன்றைய கடைசி செய்தி!

இன்னும் மூன்று மாதம் தான் அவர்களால் தாக்குப் பிடிக்க முடியுமாம். அதன் பிறகு என்ன செய்வது, கையைப் பிசைகிறார்கள் நிர்வாகத்தினர்.

அதன் பின்னால் ஒரு கதையும் உண்டு.  அதன் நிர்வாகம் அரசாங்கத்தின்  கையில் இல்லை.  மலேசிய விலங்கியில் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதாகத் தெரிகிறது.  

பிரச்சனை என்னவென்றால் முறையான நிர்வாகம் அமையவில்லை. கணக்கு வழக்குகளுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. தகுதியற்ற மனிதர்கள் வேலையில் இருக்கிறார்கள்.   உணவுகள் விலங்குகளுக்கா அல்லது மனிதர்களுக்கா என்று புரியவில்லை!      

ஒரு காலக் கட்டத்தில் சிறப்பாக இயங்கி வந்த நிர்வாகம் ஏன் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டது? 

இப்போது நாம் செய்ய வேண்டியது என்ன? இங்குப் பணி புரிபவர்கள் அனைவருடைய சொத்து விபரங்களை ஆராய வேண்டும். வரவுக்கு மீறிய சொத்துக்கள் இருப்பவர்களை சட்டத்தின் முன்னால் நிறுத்த வேண்டும்.

வேறு வழி ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை!  ஊழல் என்று வரும் போது யாராக இருந்தாலும் சட்டத்தின் முன்  நிறுத்த வேண்டும். இந்த இனத்தார் தான் செய்யும் தகுதி உண்டு மற்ற இனத்தாருக்குத் தடை என்றெல்லாம் ஒன்றுமில்லை.      

ஊழல், இலஞ்சம் என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டு வருவது மனதிற்குச் சங்கடத்தை ஏற்படுத்துகிறது.

படித்தவர்கள் அதிகமாகக் கொண்ட நாடு நமது நாடு. அதுவும் இல்லாமல் சமயத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் நாம்.

நமது அண்டை நாடான சிங்கப்பூர் என்ன சமயத்தைப் பின்பற்றுகிறது என்று யாருக்கும் தெரியவில்லை. ஆனால் அங்கு ஊழல் என்பது  உலகளவில் மிக மிகக் குறைந்து காணப்படுகிறது.

ஆனால் சமயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாம் உலகளவில் எந்த நிலையில் இருக்கிறோம்?  அப்படி ஒன்றும் மெச்சும் படியாக இல்லை என்பதே போதும்!    

இதற்கெல்லாம் ஒரே காரணம் நமது அரசியல்வாதிகள் தாம். அவர்கள் தான் மக்களுக்கு முன்னுதாரணமாக இருப்பவர்கள்.  தங்களுக்குக் காரியம் ஆக வேண்டுமானால் மக்களுக்கே இலஞ்சம் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள்!

அப்படியானால் இவர்கள் படித்த படிப்பு, தங்கள் மதத்தின் மீதான் பிடிப்பு இதனைப் பற்றியெல்லாம் இவர்கள் காவலைப்படுவதில்லையா?

நேர்மை! நேர்மை! நேர்மை! எல்லாவற்றையும் விட நேர்மை தான் தேவை! மற்றவை எல்லாம் இரண்டாம் பட்சம்!

No comments:

Post a Comment