அரசாங்கம் கவிழும் நிலையில் இருக்கிறது என்பது உண்மை தான்.
ஆனால் எதனையும் உறுதிப்படுத்த வழியில்லை. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதை மறந்து விட முடியாது. அதுவும் அரசியல் என்றாலே பொய்யும் புரட்டும் புரளுகின்ற ஓர் இடம். அங்கு நீதி இல்லை. நேர்மை இல்லை. நியாயம் இல்லை.
இப்போது எவன் கையில் அரசு இருக்கிறதோ அவன் கை தான் உயர்ந்து நிற்கும். காரணம் அவனால் அதர்மத்தை தர்மமாக்கிக் கொள்ள முடியும். அநியாயத்தை நியாயப்படுத்த முடியும். அநீதியை நீதியென நியாயப்படுத்த முடியும்.
அரசாங்கம், நேற்று யார் கையில் நாளை யார் கையில் என்பதெல்லாம் முக்கியமல்ல. இன்று, இப்போது யார் கையில் ஆட்சிப் பொறுப்பு இருக்கிறது என்பது தான் முக்கியம்.
அந்த வகையில் பார்த்தால் பிரதமர் முகைதீன் கையில் அரசாங்கம் இருக்கிறது. சபாநாயகர்கள் அவர் கையில். ஏன்? கோவிட் 19 கூட அவர் கையில் இருக்கிறது! சபாவிலிருந்து வருபவர்கள் இனி தனிமைப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்பதில் கூட ஏதோ அரசியல் இருக்கலாம்! அதன் பின்னணி என்ன என்பது நமக்கு இன்னும் தெரியவில்லை!
இப்படி எல்லாம் அலசி ஆராயும் போது கவிழ்பவர் யார் என்கிற கேள்வி எழத்தானே செய்யும். அது ஏன் எதிர்க்கட்சிகளாக இருக்கக் கூடாது?
எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்று கூடி என்னன்னவோ திட்டங்களைத் தீட்டுகிறார்கள். எல்லாம் சரி தான். அதே சமயத்தில் ஆளும் அரசாங்கமும் தன்னை தற்காத்துக் கொள்ள அவர்களும் பல அதிரடித் திட்டங்களைத் தீட்டத்தானே செய்வார்கள்?
எதிர்க்கட்சிகள் என்ன செய்கிறார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. ஒளிவு மறைவு இல்லை. ஆனால் எதிர்தரப்பு திரைமறைவில் என்ன செய்கிறது என்பது இதுவரை வெளிப்படையாகத் தெரியவில்லை. ஒளிவும் உண்டு மறைவும் உண்டு!
பிரதமர் முகைதீனைப் பற்றி அவ்வளவு எளிதில் எடைப்போட்டு விட முடியாது. கழுவுற மீன்ல நழுவற தனமைக் கொண்டவர்! அப்படி இல்லாவிட்டால் இத்தனை மாதங்கள் பதவியில் நீடித்திருக்க மாட்டார்!
ஆகக் கடைசியாக சீனப்பள்ளிகளுக்கு அதிக நிதியும், தமிழ்ப்பள்ளிகளுக்கு குறைவான நிதியும் ஒதுக்குகிறார் என்றால் அவர் எப்படிப்பட்டவர் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தேவைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்பவர் அவர்!
வரவு செலவுத் திட்டத்தில் அவர் வெற்றி பெற்றால் தொடர்ந்து தமிழ்ப்பள்ளிகள் புறக்கணிக்கப்படும் என்பது ம.இ.கா.வினருக்கு மட்டும் தான் புரியாது! நமக்குப் புரியும்.
இப்போது நமது கேள்வி எல்லாம் இன்றைய அரசாங்கம் கவிழும் என்பதை எப்படி உறுதிப்படுத்துவது? பிரதமர் முகைதீன் ஏமாளி அல்ல என்பது மட்டும் உறுதி. எதிர்க்கட்சிகள் ஏமாளிகளா?
பொறுத்திருந்து பார்ப்போம்!
No comments:
Post a Comment