Saturday 21 November 2020

ஏன் இந்த போட்டி?

 பொதுவாக இப்போது அம்னோவில் ஒரு கேள்வி எழுந்து கொண்டிருக்கிறது. 

யார் துணைப் பிரதமராக வர முடியும்,  யார் வர முடியாது  என்கிற போட்டி நடந்து கொண்டிருக்கிறது.

தேசிய முன்னணியின் தலைமைச் செயலாளர் அனுவார் மூசா திரும்பத் திரும்ப ஒன்றைக் கூறி வருகிறார். ஊழல் வழக்குகள் உள்ள அம்னோ தலைவர்கள் துணைப் பிரதமராக வரக் கூடாது என்பது அவரின் கருத்து.

ஆனால் அவர் சொல்லுகின்ற காரணம்  சரியாகத்தான் இருக்கின்றது.  அதில் சந்தேகப்பட ஒன்றுமில்லை. ஏற்கனவே ஊழல் வழக்குகள் உள்ளவர்கள் துணைப் பிரதமராக வருவதில் பல சிக்கல்கள் உள்ளன.

துணைப் பிரதமர் பதவி என்பது,  நமது நாட்டைப் பொறுத்தவரை,  கொஞ்சம் கௌரவமான பதவி. மற்ற  நாடுகளில் மிகவும் சக்தி வாய்ந்த பதவி. நமது நாட்டில் அந்த பதவிக்கு யார் வர வேண்டும், எந்த மதத்தவர் வர வேண்டும் என்கிற ஓர்  வரையறையை  வகுத்து வைத்திருக்கிறார்கள்.  மற்ற இனத்தவர் என்ன தான் படித்து உலகை ஆளுகின்ற திறன் இருந்தாலும், அவர்கள்  வரக் கூடாது  என்று சட்டம் மட்டும் சொல்லவில்லை ஆளுகின்றவர்களும்  சொல்லுகின்றார்கள்!

அதனால் தான், கொல்லைப்புற வழியாக பதவியேற்ற இன்றைய அரசு,  தடுமாற்றத்தில் ஊசாலாடிக் கொண்டிருக்கிறது!

காரணம் இன்றைய அரசில் பதவி வகிப்பவர்கள் பெரும்பாலானோர் ஊழல் வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள்! ஊழல் இல்லையென்றால் இன்றைய அரசாங்கமே இருக்க வாய்ப்பில்லை.  அத்தனை பேரும் ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள்!

இப்படி ஒரு சூழலில் யாரைத்  துணைப் பிரதமராகக் கொண்டு வருவது என்று பார்த்தால்  சிக்கல் தான்  ஏற்படும்! ஏன் பிரதமரின் சென்ற காலத்தைக் கிளறிப் பார்த்தால் அங்கும் நாறத்தான் செய்யும்!

இந்த நிலையில் தான் அனுவார் மூசா "ஊழல் வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் துணைப் பிரதமராக வரக்கூடாது!" என்கிறார்!

அவர் சொல்லுவதெல்லாம் ஊழல் செய்திருந்தால் பரவாயில்லை. ஆனால் வழக்குகள் அவர்கள் மீது இருக்கக் கூடாது என்பது தான் அவர் சொல்ல வருவது!

ஆனால் நம்மைப் போன்ற வேடிக்கைப் பார்ப்பவர்கள் இரண்டுமே சரியில்லை  என்று தான் சொல்லுவோம். முன்னாள் பிரதமர் நஜிப் பற்றி யாரும் ஒன்றும் சொல்ல வேண்டாம். இப்போது நமக்குத் தெரியும்.

ஊழல் செய்பவர்கள் பதவிக்கு வந்தால் ஊழல் இன்னும் அதிகமாகமே தவிர குறைய வாய்ப்பில்லை. அது தான் நடந்து கொண்டிருக்கிறது.

அனுவார் மூசா சொல்லுவதைக் கொஞ்சம் பார்க்க வேண்டும்.  ஊழல் செய்யலாம் ஆனால் அவர்கள் மேல் வழக்குகள் இருக்கக் கூடாது என்பது தான்! ஆனால் அவர்கள் பதவிக்கு வந்து விட்டால் அத்தனை வழக்குகளும் தள்ளுபடி ஆகி விடும்!  அதன் பின்னர் அவர்கள் குற்றவாளிகள் அல்ல! நாட்டைத் தொடர்ந்து நாசமாக்கலாம்!

ஏன் இந்த போட்டி? ஊழல் செய்யத் தான்!


No comments:

Post a Comment