ஒரு சில செய்திகள் நம்மை சிரிக்க வைக்கின்றன!
கெடா மந்திரி பெசார், முகமட் சனுசி முகமட் நோர், நாட்டுக்குப் புதியவரா அல்லது இப்போது தான் எங்கிருந்தோ விடுதலையாகி வந்திருக்கிறாரா என்று கேட்கத் தோன்றுகிறது!
இந்து கோயில்களை உடைக்கும் உடைக்கிற வேலைகளை அவருக்கு யாரும் கொடுக்கவில்லை. அவராக எடுத்துக் கொண்டிருக்கிறார். அதே போல இந்து கோயில்களுக்கு மானியங்கள் கிடையாது என்பதாக கையை விரைத்திருக்கிறார். இதுவும் அவராக எடுத்த முடிவு. அவருக்கு அந்த அதிகாரங்களை யாரும் கொடுக்கவில்லை. கொடுக்கவும் மாட்டார்கள். அவராகவும் எடுத்துக் கொள்ள முடியாது.
வழிபாட்டுத் தலங்களுக்கு அவர் பூசாரி அல்ல. எது நல்லது எது கெட்டது என்று தீர்மானிக்கும் உரிமையை யாரும் அவருக்குக் கொடுக்கவில்லை.
முகமட் சனுசி நாட்டுக்குப் புதியவரல்ல. ஆனால் புதியவர் போல பாவ்லா காட்டுகிறார்! ஏன் பிறந்ததிலிருந்து இந்நாள் வரை இந்து கோவில்களை அவர் பார்த்ததே இல்லையா? இப்போது தான் அவர் கோவிலகளைப் பார்க்கிறாரா?
மந்திரி பெசார், ஒரு வேளை கோவில்களை இப்போது தான் புதிதாகப் பார்ப்பவராக இருக்கலாம். ஆனால் கோவில்கள் இந்நாட்டுக்குப் புதிதல்ல என்பதை முதலில் அவர் புரிந்து கொள்ள வேண்டும்.
முதலில் அவர் கொஞ்சம் சரித்திரத்தைப் பின் நோக்கிப் பார்க்க வேண்டும். இவர் பிறப்பதற்கு முன்னரே இங்குக் கோவில்கள் இருக்கின்றன.அவர் தந்தையார் பிறப்பதற்கு முன்னரே இங்குக் கோவில்கள் இருக்கின்றன. அவர் பாட்டனார் பிறப்பதற்கு முன்ன்ரே இங்குக் கோவில்கள் இருக்கின்றன.
அதைவிட இன்னும் பின் நோக்கிப் போனால் இன்னும் பெரிதாக சரித்திர சான்றுகள் வரும். அது தான் பூஜாங் பள்ளத்தாக்கு. சரித்திரங்கள் பொய் சொல்லாது. கொஞ்சம் மெனக்கட்டு, ஆள் வைத்து, அதனையும் அவர் ஆராய்ந்து பார்க்கலாம்.
ஆக மந்திரி பெசாருக்கு எதுவும் புதிது இல்லை. இன்று நேற்று புதிதாக அறிமுகமாகவும் இல்லை.
இவருக்கு முன்னாள் இருந்த மந்திரி பெசார்களை விட தன்னை ஒரு படி மேல் என்று நினைக்கவும் வாய்ப்பில்லை. அவர்கள் எல்லாம் முட்டாள்களும் இல்லை. அவர்களை அப்படி இவர் நினைப்பதாகவே தொன்றுகிறது.
மந்திரி பெசார் என்பவருக்கு மிக முக்கியமான கடமைகள் உண்டு. ஏதோ ஓர் இனத்தைப் பிரதிநிதிப்பவர் அல்ல அவர் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அவர் மாநிலம், ஏதோ ஓரினத்தைச் சார்ந்து உள்ளதாக அவர் நினைப்பதைக் கைவிட வேண்டும். மூன்று இனங்கள் உள்ளது தான் ஒரு மாநிலம். எல்லா மாநிலங்களின் நிலைமையும் அப்படித்தான் உள்ளன.
கெடா மந்திரி பெசார், கெடா மாநிலத்தின் உள்ள அத்தனை குடிமக்களுக்கும் பொறுப்பானவர். மாநிலத்தின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குத் தான் அவருக்கு அந்த பொறுப்பு ஒப்படைக்கப் பட்டிருக்கிறது. பொறுப்பே பொறுப்பற்று நடந்தால் எப்படிப் பொறுப்பது?
மந்திரி பெசார் தனது பொறுப்பை உணர்ந்து நடப்பார் என நம்புவோம்.
No comments:
Post a Comment