Wednesday 18 November 2020

இவர்களையும் அங்கீகரிக்க வேண்டும்

கொரோனா தொற்று நோய் வந்த பிறகு பல மாற்றங்கள் பல வகைகளில் ஏற்பட்டிருக்கின்றன.

பொதுவாக இந்த காலத்தில் நாம் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றைய  மருத்துவத் தொடர்பாளர்கள் அனைவரையும் மிகவும் மதிக்கிறோம். அந்த மரியாதை என்பது இயல்பானதே!

ஆனால் ஒன்றை நாம் மறந்து விட்டோம்.  முன்களப் பணியாளர்கள் என்கிற போது துப்பரவு ஊழியர்களை  நாம் மறந்து விடுகிறோம். 

அதற்கு ஒரே ஒரு காரணம் தான்.  அவர்கள் எந்த மருத்துவக் கல்லூரிகளிலும் மருத்துவர் பட்டம் பெற்றிருக்கவில்லை. அல்லது சாதாரண செவிலியர்களாகக் கூட வர முடியவில்லை. அவர்களை ஏதோ  படிக்காத ஒரு கூட்டம், பிழைக்கத் தெரியாத ஒரு கூட்டம் என்பதாகத்தான் நமது கண்ணுக்குப் படுகின்றனர். 

ஆனால் அவர்கள் செய்கின்ற வேலையைப் பொறுத்தவரை அது ஒரு முக்கியப் பணி என்பதை யாருமே நினைப்பதில்லை. அது தான் நமது வருத்தம்.

துப்பரவு ஊழியர்கள்  இல்லையென்றால் இந்த தொற்று நோயிலிருந்து எந்தக் காலத்திலும் நமக்கு மீட்பு இல்லை. 

ஆமாம் எத்தனை டாக்டர்கள் வரட்டும். எத்தனை மருத்துவ நிபுணர்கள் வரட்டும்.  சுத்தமான சூழல் இல்லையென்றா அனைத்தும் பாழ். அதுவும் இப்போது உள்ள சூழலில் காலை, மாலை மட்டும் வேலை என்கிற நிலை இல்லை.  தொடர்ந்தாற் போல சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.  சுத்தமான சூழல் தான் நோயை ஒழிக்க முடியும்.

இப்படி முக்கியம் வாய்ந்த வேலையில் இருப்பவர்களுக்கு அதற்கான  அங்கீகாரம் இருக்க வேண்டும் என்பதில் வெவ்வேறு கருத்துக்கள் இருக்க முடியாது. 

அதற்காகத்தான் அவர்களது தொழிற்சங்கம் அவர்களுக்குச் சரியான அங்கீகாரம் கிடைக்க வேண்டும் "எங்களையும் முன்களப் பணியாளர்களாக சேர்த்துக் கொள்ளுங்கள்"  என்று கேட்டுக் கொண்டிருக்கிறது. 

அவர்கள் பட்டம் பெற்றவர்களாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர்களின் துப்பரவுப்  பணி என்பது குறிப்பாக மருத்துவ மனைகளில் முதன்மையான பணி எனலாம். அவர்களது பணி இல்லையென்றால் மருத்துவமனைகள் நாறிப் போகும்!

மற்றவர்களின் பணி அவர்களுக்குப் பின் தான் வருகின்றன. மருத்துவமனைகள் மட்டும் அல்ல, எங்கும் எதிலும், சுத்தமே முதன்மையான இடம் பெறுகிறது. 

மற்ற பணியாளர்கள் எந்த அளவுக்கு அபாயத்தை எதிர்நோக்குகிறார்களோ அதே அபாயத்தைத் தான் துப்பரவு ஊழியர்களும் எதிர்நோக்குகின்றனர்.

அபாயம் என்பது இங்கு பணி புரியும் அனைவருக்குமே உண்டு. மேல், கீழ் என்பதாக ஒன்றுமில்லை.

அதனால் துப்புரவு ஊழியர்களின் கோரிக்கை என்பதில் ஒரு நியாயமுண்டு என்பதை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அங்கீகாரம் வேண்டும்! அது சரியே!

No comments:

Post a Comment