இதற்கு முந்தைய பக்காத்தான் அரசாங்கம் `தேசிய சேவை பயிற்சி தேவை இல்லை என்பதால் அதனைக் கைவிட்டது என்பது நமக்குத் தெரியும்.
இன்றைய கொல்லைப்புற அரசாங்கம் அது தேவை என்று சொல்லி ஓர் ஆண்டுக்கு 700 மில்லியன் ரிங்கிட்டை தேசிய சேவை பயிற்சிக்காக ஒதுக்கியிருக்கிறது!
ஏற்கனவே இந்த பயிற்சியைப் பற்றி ஏகப்பட்ட குளறுபடிகள், பிரச்சனைகள்! முந்தைய பாரிசான் அரசாங்கத்தால் எதனையும் சரி செய்ய முடியவில்லை என்பதையும் நாம் அறிவோம்.
ஆனால் மக்கள் தெளிவாக ஒன்றைப் புரிந்திருக்கிறார்கள். இந்த பயிற்சி தேவை என்றால் அது ஆளும் கட்சியில் உள்ளவர்கள் பணம் பண்ணத் துடிக்கிறார்கள் என்பது மட்டும் தான்! ஏற்கனவே அது தான் நடந்தது. அம்னோவில் உள்ளவர்கள் பணக்காரர் ஆனார்கள். இந்த பயிற்சி திட்டம் பல பணக்காரர்களை உருவாக்கியது. அனைவரும் அம்னோ கட்சியினர்! இப்போது அது மீண்டும் தலை தூக்குகிறது என்பது வருத்தத்திற்குரியது.
அரசாங்கம் சொல்லுவது போல இந்த திட்டத்தினால் எந்த பயனும் ஏற்படப் போவதில்லை. தேசப்பக்தியை வளர்க்கும் என்பதெல்லாம் வெறும் கதை. பயிற்சி பெறாத அந்த காலாத்திலெல்லாம் தேசபக்தி இல்லாதவர்களா கம்யூனிஸ்டுகளுக்காக எதிராகப் போராடினார்கள்? தேசபக்தி என்பது எல்லாக் காலத்திலும் உண்டு. அது இப்போதும் உண்டு.
தேசிய சேவை பயிற்சி என்பது பல நாடுகளில் உண்டு. இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் நமது நாட்டில் அதனையும் ஒரு வியாபார யுக்தியாக பயன்படுத்துவது தான் நமக்குள்ள பிரச்சனை!
தேசபக்தி இருந்தால் ஏன் இந்த அளவுக்கு நாட்டில் ஊழல் மலிந்து கிடக்கிறது? அடிப்படையில் நமக்கு தேசபக்தி என்பது இல்லை. அதற்குக் காரணம் அரசியல்வாதிகள். கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கிறான். வெளிநாடு ஓட முடிந்தால் ஓடி விடுகிறான்! ஓட முடியாதவன் நாட்டிலேயே இருந்து கொண்டு வழக்குகளைச் சந்திக்கிறான்!
இப்படியெல்லாம் அரசியல்வாதிகளை வைத்துக் கொண்டு எப்படி தேசபக்தி உணர்வை ஊட்ட முடியும்?
மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாடிக் சொல்லுவது போல இந்த பணத்தை உயர் கல்விக்காக செலவு செய்யுங்கள். வேறு பயன் உள்ள திட்டங்களுக்காகச் செலவு செய்யுங்கள். நாடு உங்களை வாழ்த்தும். ஏதோ ஒரு சிலர் பணம் சம்பாதிப்பதற்காக பழைய திட்டங்களை எல்லாம் ஞாபகத்திற்குக் கொண்டு வராதீர்கள்!
தேசிய சேவை பயிற்சி தேவை இல்லை!
No comments:
Post a Comment