Monday 9 November 2020

சட்டவிரோத குடியேறியா?

 டிவி 3 என்பது நாட்டின் பிரபலமான ஒரு தொலைக்காட்சி நிறுவனம்.

அந்நிறுவனத்தின் ஒரு செய்தி வாசிப்பாளர், செய்தி வாசிப்பின் போது,  அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ்ஸை "சட்ட விரோதக் குடியேறியின் மகள்!" என்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

இப்போது நமக்கு ஒரு கேள்வி உண்டு.  செய்தி வாசிப்பாளர் தன் விருப்பதற்கு ஏற்ப செய்திகளை வாசிக்க முடியாது. அவருக்கு அந்த அதிகாரம் இல்லை.  செய்தி ஆசிரியர் என்ன செய்தியைக் கொடுக்கின்றாரோ அதை மட்டும் தான் அவர் வாசிக்க வேண்டும்.

செய்தி ஆசிரியர் தவறான செய்திகளைக் கொடுத்தால்,  தவறு செய்தி வாசிப்பாளர் மீது இல்லை. அவர் கொடுக்கப்பட்ட தவறான செய்திகளுக்குப் பொறுப்பானவர் இல்லை.  ஆனால் இந்த 1.30 மணி செய்தி வாசித்தவர் தனது தவறுக்கு மன்னிப்பு கேட்டு டுவிட்டரில் பதிவேற்றம் செய்துள்ளார்! அந்த தொலைக்காட்சி நிலையமும்  தனது தவறுக்கு மன்னிப்பும் கேட்டுள்ளது. 

ஆனால் இங்கு செய்தி ஆசிரியரைப் பற்றி ஒரு தகவலும் இல்லை. செய்தி ஆசிரியரும் செய்திகளை தனது விருப்பம் போல் எழுத முடியாது.  வெளிநாட்டுச் செய்திகள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் இருக்கும். அவைகள் மொழி பெயர்க்கப்பட வேண்டும்.

இப்போது நாம் கேட்க நினைப்பதெல்லாம் ஏதோ ஒரு செய்தியில்,   செய்தி ஆசிரியருக்கு இந்த "கள்ளக் குடியேறியின் மகள்" என்கிற செய்தி குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் அப்படி ஒரு செய்தியை அவராகவே திணித்திருக்க வழியில்லை. அந்த செய்தியின் மூலம் எங்கிருந்து வந்தது என்பது தான் நமது கேள்வி.

நமது நாடு கள்ளக்குடியேறிகளுக்குப் பெயர் பெற்ற ஒரு நாடு. இன்று பெரிய பதவிகளில் இருப்பவர்கள் எல்லாம் பெரும்பாலும் கள்ளக்குடியேறிகளின் பேரப்பிள்ளைகள், பிள்ளைகள் தாம்.  இங்கு குடியேறுபவர்களுக்குத் தகுதி என்று ஒன்றும் இல்லை! தேவையும் இல்லை! இலஞ்சம் ஒன்று மட்டுமே அதனைத் தீர்மானிக்கின்றது!

ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகளுக்குக் குடியேறுவதற்குப் பல கட்டுப்பாடுகள் உண்டு.  குறிப்பாக கல்வித் தகுதி மட்டுமே அதனைத் தீர்மானிக்கின்றது.

அப்படி ஒரு சூழலில் தான் கமலா ஹாரிஸ்ஸின் தாயார் மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றவர். அடுத்த நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் பத்திரிக்கைகளில் விலாவாரியாக வெளியாகைவிட்டன. புதிதாகச் சொல்ல ஒன்றுமில்லை.

சட்டவிரோதக் குடியேறி, கள்ளக்குடியேறி போன்ற வார்த்தைகளை அதிகம் பயன்படுத்துவது நமது நாடு. அமெரிக்கா போன்ற நாடுகளை நம்மோடு ஒப்பிடுவது சரியல்ல.

ஆனாலும் இப்படி ஒரு தவறுக்கு மூலம் என்ன என்பது தான் இன்னும் மனதை அரித்துக் கொண்டிருக்கிறது!

No comments:

Post a Comment