Saturday 14 November 2020

குடியைத் தவிருங்கள்!

 எல்லாருக்கும் தான் பெருநாள்கள் வருகின்றன.

பெருநாள்கள் மகிழ்ச்சியைக் கொடுக்கின்றன. குடும்பங்கள் ஒன்று சேர்கின்றன. எல்லாரும் சேர்ந்து கொண்டாடுகிறோம். மகிழ்ச்சி, சந்தோஷம்  கொடுப்பது பெருநாள் காலங்கள் தான்.

ஆனால் இந்த ஆண்டு அதுவும் முடியவில்லை.  வீட்டோடு கொண்டாட வேண்டிய சூழல்.  கார்களில் இருவருக்கு மேல் போகக் கூடாது என்பது கூட கடுமையாகத்தான் இருக்கிறது. அதனால் வீட்டிலிருந்து கொண்டே என்ன முடியுமோ அதன் படியே நடந்து கொள்வது தான் அனைவருக்கும் நல்லது.

இந்த ஆண்டு ஓரு வித்தியாசமான தீபாவளி.  எங்கும் பயணம் செய்ய முடியாத - ஒரு வழியும் இல்லாத - வீட்டிலேயே கொண்டாட வேண்டிய தீபாவளி.

அதுவும் நல்லது தான். நண்பர்கள் இல்லாத தீபாவளி.  உறவுகள் இல்லாத தீபாவளி.  இன்னொன்றையும் சேர்த்துக் கொள்ளலாம். சிக்கனமான தீபாவளி.

ஆமாம் இப்போது நாம் பல பிரச்சனைகளை எதிர்நோக்குகிறோம். ஒவ்வொரு குடும்பத்திலும் தலைவனோ தலைவியோ யாராவது ஒருவர் அல்லது இருவருமாகக் கூட இருக்கலாம் - வேலை  இழந்த நிலையில் இருக்கின்றனர்.  அதனால் இது தான் சரியான நேரம். எப்படி சிக்கனமாகத் தீபாவளியைக் கொண்டாடலாம் என்பதப் புரிந்து கொள்ள சரியான நேரம்.

ஆனால் நம்முடைய மிகப் பெரிய பலவீனம் எது என்றால் நம் கண்முன்னே நிற்பது குடி ஒன்று தான்.

இந்தக் குடி ஒன்று தான் மற்ற இனத்தவரிடமிருந்து நம்மைப் பிரித்துக் காட்டுகிறது.  குடித்துவிட்டு சாலைகளில், கால்வாயில்களில் விழுந்து கிடப்பவர்கள் நம் இனத்தவராகத் தான் இருக்க வேண்டும்.

இந்தக் குடி நம் குடும்பங்களில் இல்லையென்றால் தலை நிமிர்ந்து நடப்பவர்கள் நாமாகத்தான் இருக்க முடியும். நாம் எந்த வகையிலும் குறைந்தவர்கள் அல்ல. கல்வியில் சாதனையாளர்கள் நாம். பொருளாதாரத்தில் மற்றவர்களை விட எந்த அளவிலும் குறைந்தவர்கள் அல்ல. ஆனால் நம்மை மிகத் தாழ்ந்த நிலையில் காட்டுவது இந்தக் குடிப் பழக்கம் தான்!

இந்த தீபாவளி  நந்நாளில் நம்மைப் பற்றி சிந்தித்துப் பார்ப்போம். நமது குடும்பங்களைப் பற்றி சிந்திப்போம். பிள்ளைகளைப் பற்றி சிந்திப்போம். 

இந்தக் கொரோனா தொற்று என்பது மறைமுகமாக நமக்கு ஒரு பாடத்தைக் கற்பிக்கிறது. சிக்கனத்தைக் கற்பிக்கிறது. குடும்ப ஒற்றுமையைக் கற்பிக்கிறது. வருங்காலத்தில் சிறப்பான வாழ்க்கை வாழ கற்பிக்கிறது.

ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக குடியைத் தவிருங்கள். அதவே சிறந்த பாடம்!

No comments:

Post a Comment