Thursday 5 November 2020

நல்லது நடக்கும் என நம்புங்கள்! (6)

 நல்லது நடக்கும் என நம்புங்கள். நம்பிக்கை தான் வாழ்க்கை என்பார்கள். நம்பிக்கை இல்லாத வரை எல்லாமே வெறுமையாகத்தான் இருக்கும். அனைத்தும் பூஜ்யத்தில் தான் முடியும்.

கொஞ்சம் முயற்சி எடுத்தால் போதும். தீராத பிரச்சனையும் தீர்ந்துவிடும்.

சமீபத்தில் படித்த ஒரு செய்தி. மேரி என்று அழைக்கப்படும் ஒரு பெண்மணி கொரோனா தொற்று நோய் காரணமாக தனது வேலையை  இழந்தார். அவருடைய கணவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து போனார்.

வேலை இழந்த அவருக்கு பொறுப்புக்கள் நிறைய இருந்தன. தனது மூன்று பிள்ளைகளுக்கும் உணவு, கல்வி இவை அனைத்தும் தேவை. வயதான தாயாரைக் கவனிக்க வேண்டும்.  வாழ்ந்த வீடு வாடகை வீடு என்பதால் வாடகைக் கட்ட வேண்டும். இன்னும் பிற சராசரி குடும்பங்கள் எதிர்நோக்கம் பிரச்சனைகள் அவருக்கும் உண்டு.

வேலை போனதால் கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்திருக்கவா  முடியும்? அவருக்குத் தெரிந்த ஒரு சிறிய தொழிலைத் தொடங்கினார். அது ஒன்றும் பிரமாணட தொழில் என்று சொல்லுவதற்கில்லை. வெறும் நாசிலெமாக், மீகூன் - இது தான் அவருக்குத் தெரிந்த தொழில். அதனை வைத்து தொழிலை ஆரம்பித்தார். காலைப் பசியாறல் மட்டும் தான்.

இதில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று உண்டு. துணிச்சலாக அவர் ஆரம்பித்த அந்த தொழிலுக்கு நல்ல வரவேற்பு  கிடைத்தது. மக்களின்  ஆதரவு  நன்றாக இருந்தது. பல வாடிக்கையாளர்கள் வீடுகளிலிருந்தே நாசிலெமாக் ஆர்டெர் செய்தனர். நிறைய உதவிகள் தேடி வர ஆரம்பித்தன. தனது வீட்டு மாத வாடகையான 700 வெள்ளியை மாதா மாதம் கொடுத்து உதவுவதாக ஒருவர் உறுதி அளித்திருக்கிறார்.

அவரின் தொகுதியான, செபூத்தே,   நாடாளுமன்ற உறுப்பினர், தெரேசா கோக், சமையல் எண்ணைய், முட்டை, சீனி போன்ற நாசிலேமாக் செய்வதற்குத் தேவையான பொருள்களை வாங்கிக் கொடுத்திருக்கிறார். அத்தோடு ஒரு மாதத்திற்கு அவரது அலுவலகத்திற்கு முப்பது நாசிலேமாக்  பொட்டலங்களை ஒரு மாதத்திற்கு அனுப்பும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார். 

கோலாலம்பூர் இந்திய வர்த்தக சபையும் அவருடைய தொழில் வளர்ச்சி அடைந்து வருவதால் அவர்களது  பங்காக பெரிய ரைஸ் சூக்கர் ஒன்றை  வாங்கிக் கொடுத்திருக்கின்றனர்.

இப்போது அவரது தொழில் உரிமம் பெற்று முறையாகச் செய்யவும் அவருக்குப் பொருத்தமான தொழில் செய்ய அதற்கான இடம் கிடைக்கவும் துணை அமைச்சர் எட்மண் சந்தாராவும் ஆதரவு கரம் நீட்டியிருக்கின்றார்.

இந்த பெண்மணியிடமிருந்து  என்ன தான் நாம் கற்றுக் கொண்டோம்? வேலை போனதும் வீட்டில் முடங்கிக் கிடக்கவில்லை. முதலடி அவர் எடுத்து வைத்தார். அந்த முயற்சி அவருடையது. அதன் பின்னர் என்ன நடக்க வேண்டுமோ அது நடந்தது. அது அப்படித்தான் நடக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

எந்த நிலையில் இன்று நாம் இருந்தாலும் நாம் செய்ய வேண்டியதெல்லாம் அந்த முயற்சி தான்.  சோர்ந்து போகாமல், சோர்வடைந்து போகாமல் எடுத்து வைப்போம் முதல் அடியை. அதன் பின்னர் பாருங்கள் உங்களது திருவடியை!

வளர்வோம்! வளர்ச்சி அடைவோம்

No comments:

Post a Comment