நம்மால் இன்னும் இந்த பெரிக்காத்தான் அரசாங்கத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை!
வரவு செலவு திட்டத்தை ஆதரிக்கவில்லை என்றால் அவர்கள் துரோகிகள் என்கிறார்கள்!
அதாவது அவர்கள் மிகவும் உழைத்து, களைத்து இந்த வரவு செலவு திட்டத்தைத் தயாரித்திருக்கிறார்களாம். அதை எதிர்க்கும் அனைவரும் துரோகிகள், துரோணர்கள், இனப்பற்று இல்லாதவர்கள், சமயப்பற்று இல்லாதவர்கள் இப்படிப் பல வசை மொழிகள்!
அதாவது இவர்கள் பதவியில் நீடிக்க வேண்டுமென்றால் நாம் அனைவரும் சேர்ந்து அவர்களை ஆதரிக்க வேண்டுமாம்!
இந்த வரவு செலவு திட்டத்தை பலர் ஏற்கவில்லை. இது ஒரு தலைபட்சமான வரவு செலவு திட்டம் என்பதாகப் பலர் கூறுகின்றனர். சீனர்கள், இந்தியர்கள் நலனில் கொஞ்சம் கூட அக்கறை காட்டவில்லை என்பதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு.
இது பற்றி கருத்துரைத்த ஒரு பொருளாதார நிபுணர் இத்தனை ஆண்டுகளில் இது போன்ற ஒரு வரவு செலவு திட்டத்தை நாம் கண்டதில்லை எனக் கூறுகிறார்! இது நிச்சயமாக எதிர்க்கப்பட வேண்டிய ஒன்று என்பது அவரது அபிப்பிராயம்.
பொதுவாக எல்லா கட்சிகளுமே இந்த வரவு செலவு திட்டத்தை எதிர்க்கின்றன. எல்லாக் கட்சிகளுமே இந்த வரவு செலவு திட்டத்தில் ஒரு சில மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்கின்றன. ஏன், நமது முன்னாள் பிரதமர் நஜிப் கூட "மாற்றங்கள் தேவை" என்கிறார்.
வரவு செலவு திட்டம் என்பது எல்லா மலேசியர்களுக்கும் பொதுவானது என்கிற ஒர் அடிப்படை அறிவு கூட இல்லாமல் தயாரிக்கப் பட்டிருப்பதாகவே பலர் கருதுகின்றனர்.
பாரிசான் கட்சி ஆட்சியில் கூட இப்படி ஒரு வரவு செலவு திட்டம் தயாரிக்கப்பட்டதில்லை என்று சொல்லப்படுகிறது!
ஆமை புகுந்த வீடும் பாஸ் கட்சி இணைந்த அரசாங்கமும் உருப்படவே உருப்படாது என்பதை இப்போது நாம் கண்கூடாகவே பார்க்கிறோம்.
இப்போது பந்து பிரதமர் முகைதீன் கையில்! அவருக்கு இரண்டு தீர்வுகள் உள்ளன. ஒன்று: எதிர்க்கட்சிகள் என்ன சொல்ல வருகின்றன என்பதைக் கேட்க வேண்டும். அந்த மாற்றங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். இரண்டு: வரவு செலவு திட்டம் விவாதத்திற்கு வரும் முன்னேரே அரசாங்கத்தைக் கலைத்து விட வேண்டும்!
அரசாங்கம் கவிழும் அபாயத்தை அவர் விரும்ப மாட்டார் என நம்பலாம்!
No comments:
Post a Comment