இன்று நாட்டில் வேலையிழந்து நிற்பவர் பலர்.
வேலையிழந்தவர்களுக்கு ஒன்று அவர்களுக்கு வேலை கிடைக்க வேண்டும். அல்லது பொருளாதார உதவி கிடைக்க வேண்டும்.
அரசாங்கத்தால், வேலையிழந்த அனைத்துக் குடும்பங்களுக்கும் பெரிய அளவில் உதவ வாய்ப்பில்லை.
அதனால் ஊழியர் சேமநிதியிலிருந்து அவர்களுக்கு உதவுவது எப்படி என்று இப்போது அரசாங்கம் ஆராய்ந்து கொண்டிருக்கிறது. அவர்களின் சேமிப்பு நிதியிலிருந்து மாதாமாதம் 500 வெள்ளி கொடுக்க முடியுமா என்று இப்போது ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர். அந்த திட்டம் நடைமுறைக்கு வந்தாலும் அதுவும் சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு ஓரளவு உதவியாக இருக்கும் என்பதும் உண்மை.
ஆனால் ஊழியர்களில் பலர் - அதாவது இப்போது வேலை இழந்த பலர் - வங்கியில் கடன் வாங்கி வீடுகளை வாங்கியிருப்பர். ஒரு சிலருக்கு அவர்களின் மாதாந்திர தவணைகள் முடிய இன்னும் ஒரு சில ஆண்டுகள் இருக்கலாம். அல்லது பத்து ஆண்டுகள் கூட இருக்கலாம்.
சொந்த வீடு என்பது ஒவ்வொருவருக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒன்று. தலைக்கு மேல் ஒரு கூரை இருந்தால் அவன் கொடுத்து வைத்தவன் என்பார்கள். ஒரு வீடு அவனுக்குத் தெம்பைத் தரும். பிள்ளைக் குட்டிகளோடு அவன் நடுத்தெருவுக்கு வர வேண்டிய தேவை இல்லை.
இப்படி ஒரு சில ஆண்டுகள் அல்லது பத்து ஆண்டுகள் இன்னும் மாதாந்திர தவணைகள் கட்ட வேண்டி இருந்தால் அவர்களுடைய கடன்களை முற்றிலுமாக அடைக்க அவர்களுடைய சேமநிதியிலிருந்து பணம் கொடுத்து உதவ சேமநிதி வாரியம் முன் வர வேண்டும். அதாவது அவர்களுடைய சேமநிதியில் போதுமான பணம் இருக்குமானால் இந்த உதவியை அவர்கள் செய்யலாம்.
இன்றைய சூழலில் சேமநிதியிலிருந்து பணம் எடுக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதில் வீடு வாங்குவதையும் சேர்த்துக் கொள்ளலாம்.
வீடு ஏன் இவ்வளவு முக்கியம்? ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு மனிதனுக்கு வேலை இல்லை. அதுவே அவனுக்கு மிகப்பெரிய பலவீனம். இந்த நிலையில் அவன் வீட்டுக்காக மாதாந்திர தவணைக் கட்ட வேண்டும். அது அவனை பலவேறு சிக்கல்களில் கொண்டு போய்ச் சேர்க்கும். வீடு என்று ஒன்று இருந்துவிட்டால் அதுவே அவனுக்கு மிகப் பெரிய பலம்.
இந்த நேரத்தில் நாம் கேட்டுக் கொள்ளுவதெல்லாம்: ஊழியர் சேமநிதி வாரியம் தனது சந்தாதாரார்களுக்கு இது போன்ற சொந்த வீடு வாங்கும் திட்டத்துக்கு உதவ முன் வர வேண்டும் என்பது தான்.
நல்லது நடக்கும் என எதிர்பார்ப்போம்!
No comments:
Post a Comment