Monday 16 November 2020

பிரச்சனைகளைத் தகர்த்தெறியுங்கள்!

 இப்போது உள்ள கொரோனா தொற்றின் காலக் கட்டத்தில் பிரச்சனைகளுக்குப் பஞ்சமில்லை. நாம் வேண்டாமென்றாலும் அவைகள் நம்மைத் தேடித்தான் வருகின்றன!

ஆனால் நம்மால் என்ன செய்ய முடியும்? மூலையில் முடங்கி விட முடியாது! எதிர்த்து நிற்பது தவிர வேறு சாத்தியங்கள் இல்லை!

எல்லாக்  காலக் கட்டங்களிலும் பிரச்சனைகள் வரத்தான் செய்கின்றன. அப்போதும் கூட நாம் ஓடி ஒளியவில்லை! இப்போது மட்டும் என்ன?

இந்த உலகம் பெரிது. யாரோ ஓரிருவர் கையில் அடங்கிப் போய் விடவில்லை. வாழ்வதற்கு இன்னும் எத்தனையோ வழிகள் உள்ளன.

ஒரு கதவு அடைக்கப்பட்டால் இறைவன் ஒன்பது கதவுகளைத் திறந்து வைப்பார்  என்பதை நம்ப வேண்டும்.

ஏற்றத்தாழ்வு உள்ள உலகில் தான் நாம் வாழ்கிறோம்.  ஏற்றத்தாழ்வுகளுக்கு  இடையே தான் நமது வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது.

ஆனால் இப்போது இந்த நேரத்தில் ஏற்றத்தாழ்வுகள் கொஞ்சம் அதிகமாகவே இருக்கலாம்.  எதுவும் நிரந்தரமல்ல.

ஒரு விஷயம் நம்மைக் கவர்கிறது. ஒரு காலக்கட்டத்தில் மிகவும் அப்பிராணிகள் என்று நினைத்த பலர் இன்று துணிச்சலோடு தங்களது குடும்பத்தைக் கரைசேர்க்க களத்தில் இறங்கி விட்டனர்! அது ஒரு பெரிய மாற்றம். தேவையான மாற்றம். 

இந்த மாற்றத்தைத் தான் நாம் விரும்புகிறோம். நாம் முடங்கிக் கிடந்து சாக வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. யாரோ ஒருவரை நம்பி சார்ந்து வாழ வேண்டிய அவசியமில்லை.

வாழ்வதற்கு வழியேயில்லை என்கிற நிலைமை ஒன்றும் இல்லை. வாழ நினைத்தால் வாழலாம் என்கிற ஒரு பாடல் உண்டு. அது நமது கையில் உண்டு. அவ்வளவு தான்.

நாம் துரித உணவகங்களுக்குச் செல்கிறோம். துரித உணவுகளைச் சாப்பிடுகிறோம். எல்லாக் காலங்களிலும் நாம்  இப்படிச் சாப்பிடுகிறவர்களாகவே இருக்கத்தான் வேண்டுமா?

ஒரு சில பாதிக்கப்பட்டவர்கள்  தங்கள் எண்ணங்களை மாற்றிக் கொள்ளுகின்றனர்.  தங்களுக்குத் தெரிந்த சமையற்கலைகளை வைத்து அதனை தொழிலாகவே மாற்றிக் கொள்வதைச் சமீப காலங்களில் நாம் பார்க்கிறோம். இது போன்ற மாற்றங்கள் தான் நமக்குத் தேவை.

நம்மைப் பார்த்து குற்றம் சொல்லுவார்கள், குறை சொல்லுவார்கள் என்பதை நாம் பார்த்துக் கொண்டிருந்தால் எதுவும் நடக்காது.  குறை சொல்லுபவர்கள் உங்களுக்கு உதவத்  தயார் என்றால் குற்றம் சொல்லிவிட்டுப் போகட்டும். ஆனால் அதெல்லாம் நடக்கப் போவதில்லை!

பிரச்சனைகளைப் பார்த்துப் பயப்பட வேண்டாம். ஓடி ஒளிய வேண்டாம்! அவைகளை முறியடிக்க வேண்டும், தகர்த்தெறிய வேண்டும்! அதுவே வெற்றீ!

No comments:

Post a Comment