Friday 27 November 2020

புதிய பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்

 கொரோனா தொற்று அல்லது கோவிட் 19 என்று எப்படிச்  சொன்னாலும் சரி இனி அதற்கு முடிவு உண்டா அல்லது இல்லையா என்பது இதுவரை தெரியவில்லை!

இனி இது தொடர்கதை தான். அதோடு வாழக் கற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லுகின்ற தரப்பும்  உண்டு. ஆனால் அப்படி சொல்லுவதில் ஏதும் தவறு இருப்பதாகவும் தெரியவில்லை.

இப்போது  நமது கண்ணுக்குத் தெரிவதெல்லாம் தீர்வு இன்றைய நிலையில் சாத்தியமில்லை என்பது தான்.  

இன்னும் மருந்தே கண்டு பிடிக்கவில்லை என்கிற போது தீர்வுக்கு இப்போதைக்கு வழியில்லை.

ஆனால் இந்த கொரோனா தொற்று நமக்கு ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுத்திருக்கிறது. வாழ்க்கை என்பது ஒரே மாதிரியாக இருக்காது என்கிற பாடம் மிகவும் முக்கியமானது. மாடாக உழைப்பது, சம்பாதித்ததை செலவு செய்து ஜாலியாக இருப்பது,  பணம் எப்போது வேண்டுமானாலும் சம்பாதித்திக் கொள்ளலாம் - என்கிற மனப்பான்மையை தகர்த்தெறிந்து விட்டது கொரோனா தொற்று.

பணம் எப்போது வேண்டுமானாலும் சம்பாதிக்க முடியுமா?  முடியாது என்பதை இப்போது நாம் பார்த்து வருகிறோம்.  வேலை இல்லாமல் எப்படி சம்பாதிக்கப் போகிறோம்? அடுத்த அடி எடுத்து வைக்க வழியில்லாமல் இப்போது பலர் விழிபிதுங்குகின்றனர்.

இப்போது நமக்கு இருக்கும் ஒரே வழி நமக்கு என்ன தெரியுமோ அதனை வைத்து பிழைக்கக்  கற்றுக்கொள்ள வேண்டும். வெட்கப்பட்டால் கதைக்கு ஆகாது. குடும்பம், பிள்ளைகள் என்று இருக்கும் போது நமது கடமைகளை அலட்சியப்படுத்த முடியாது.

சமீபத்தில் நான் படித்தவை, நேரில் கண்டவைகளை  கொஞ்சம் பகிர்ந்து கொள்ளுகிறேன்.

ஒரு குடும்பப் பெண் தனது மோட்டார் சைக்கிளில் பத்தாய் வியாபாரம் செய்கிறார். ஓர் இளைஞர் ஸ்பைடர்மேன் உடைகளை அணிந்து கொண்டு காரில் பத்தாய் வியாபாரம் செய்கிறார். ஒர் இளைஞர் தனது சைக்கிளில் தேநீர் வியாபாரம் செய்கிறார். ஓர் விமான ஓட்டுநர் சிறிய அங்காடி கடை ஒன்றை வைத்துக் கொண்டு , தனது விமான உடையுடன்,  பலகார வகைகளை வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்.  ஒரு விமான பணிப்பெண் பலகாரங்கள் செய்து உணவகங்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார். ஓர் ஆசிரியை வேலை பறிபோக சிறியளவில் பிரியாணி கடை ஒன்றை நடத்துகிறார். நல்ல வேலையில் இருந்த இளைஞர் ஒருவர், வேலை பறிபோக, மீன் வியாபாரத்தில் இறங்கிவிட்டார். 

இன்னும் எத்தனையோ இருக்கலாம். நாம் வாழ வேண்டும். நமது குடும்பம் வாழ வேண்டும். நமக்குத் தெரிந்த தொழிலை ஏற்றுக் கொண்டு வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டியது தான். 

குறை சொல்லுவதில் பயனில்லை. யதார்த்தம் இது தான். ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வேண்டும். புதிய பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

மறக்க வேண்டாம்! எந்த சூழ்நிலையிலும் வெற்றி ஒன்றே நமது இலக்கு!

No comments:

Post a Comment