Thursday 26 November 2020

வரவு செலவுத் திட்டம் நிறைவேறுமா?

 எது எப்படியோ தனது முதல் பரிட்சையில் தேர்வு பெற்று விட்டது  பிரதமர் முகைதீனின் பெரிகாத்தான் நேசனல் அரசாங்கம்!

ஆனால் அத்தோடு முடிந்துவிடவில்லை. இன்னும் சில முட்டுக்கட்டைகளைக் கடந்து செல்ல வேண்டும். குறைந்தபட்சம் வரும் திங்கள் கிழமை வரை! 

போகிற போக்கைப் பார்க்கின்ற போது அப்போதும் வெற்றி பெற வாய்ப்பிருப்பதாகவே நமக்குத் தோன்றுகிறது.

இப்போது இந்த நாடாளுமன்ற அமர்வில் ஆளுங்கட்சிக்கு முக்கியமான கதாநாயகனாக விளங்குபவரும் எதிர்கட்சிகளுக்கு வில்லனாக விளங்குபவரும் நாடாளுமன்ற சபாநாயகர் அஸார் ஹருன் என்பது தான் இங்கு விசேஷமாக கவனிக்கப்பட வேண்டியது.

அவர் மனம் வைத்தால் முடியாததும் முடிந்து விடும்! அந்த திறமை அவருக்கு உண்டு!  அவர் முன்னால் எதிர்கட்சிகள் வலுவிழந்து விடுகின்றன.  எங்கே கோடு போட வேண்டும், எங்கே வாயை அடைக்க வேண்டும், எங்கே அவர்களை நிறுத்த வேண்டும் என்பதெல்லாம் அவருக்கு அத்துப்படி! எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத காரியங்களைச் செய்ய அவர் தயங்க மாட்டார்! அது அவர் பிரதமருக்குச் செய்ய வேண்டிய செஞ்சோற்றுக்கடன்! அற்காக அவரைப் பாராட்டாலாம்!

இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். முதல் தேர்வில் பிரதமர் முகைதீன் வெற்றி பெற்று விட்டார் என்பதை வேறு ஒரு கோணத்திலும் நாம் கவனிக்க வேண்டும்.  பிரதமர் முகைதீன் இந்த ஆதரவைக் கண்டு நான் மனம் நெகிழ்ந்து விட்டேன் என்கிறார்.   அதே போல மாமன்னரும்  ஆதரவு கொடுத்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்திருக்கிறார்.

இவைகளெல்லாம் நமக்கு எதையோ சுட்டுகின்றன என்றே நமக்குத்  தோன்றுகிறது. இதனையே  சபாநாயகர் நடப்பு அரசாங்கத்திற்குச் சாதகமாக எடுத்துக் கொள்ளலாம் அல்லவா? இனி புதிதாக நம்பிக்கைத் தீர்மானம் தேவையில்லை என்பதாகக் கூட அவர் சொல்லலாம்! அல்லது  வரவு செலவுத் திட்டம் தோல்வி அடைந்தாலும் முதல் தீர்மானம் வெற்றி பெற்றதைச் சுட்டிகாட்டி அதனையே வெற்றியாக எடுத்துக் கொள்ளலாம்!அதற்காக ஏதோ ஒரு சட்டத்தை தனக்குத் துணையாகக் கொண்டு வரலாம்! 

அடாடா! ஆளுகின்ற  நிலையில் உள்ளவனுக்கு எத்தனையோ முகங்கள்! அநியாயத்தையும் நியாயம் என்று சொல்லலாம்! அநீதியையும் நீதி என்று சொல்லலாம்!

அதனால் கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது பிரதமர் முகைதீனின் அரசாங்கம் கவிழும் என்று சொல்லுவதற்கில்லை! அது தொடரும் என்றே தோன்றுகிறது!

வரவு செலவுத் திட்டம் நிறைவேறினால் முகைதீன் யாசின் தனது பதவியில் தொடர்வார். அம்னோ தரப்புக்குத் தங்களைப் பணக்காரர்களாக்கிக் கொள்ள நிறைய வாய்ப்புக்கள் உள்ளன.

நாம் வழக்கம் போல, ம.இ.கா.வினர் போல, கிடைப்பதை ஏற்றுக் கொண்டு மகிழ்ச்சியாக வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.  கிடைக்கவில்ல என்றால்? கிடைத்ததாக நினைத்து வாழ வேண்டும்!

வரவு செலவுத் திட்டம் நிறைவேறுமா? ஆம் நிறைவேறும் என்பதே நமது கணிப்பு!

No comments:

Post a Comment