Sunday 16 October 2022

கருமை நிறமும் அழகு தான்!

                                     San Rachel, Puthucherry Girl in the Modelling Industry

கருமை நிறம் தான். "அதனால் என்ன வீட்டில் முடங்கிக் கிடக்க நான் தயாராக இல்லை"  என்கிறார்  இந்தியா, புதுச்சேரியைச் சேர்ந்த தமிழ்ப்பெண், சான் ராச்சல்.

டாக்டருக்குப் படிக்கும் அவருக்கு மருத்துவத் துறையும்  மாடலிங் துறையும் இரு கண்கள் என்கிறார் ராச்சல்.. அவரது  வீட்டில் அவரைத்தவிர வேறு யாரும் தனது நிறத்தில் இல்லையாம்.  கவலையாகத்தானே இருக்கும்!

ஆனால் அவருக்கு அது பற்றியெல்லாம் கவலையில்லை!  குழந்தை பருவத்தில், தனது வீட்டிலேயே,  தனது நிறம் பற்றியான சர்ச்சை ஆரம்பமாகி விட்டதாம்!  அதன் பின்னர் பள்ளியில் அப்புறம் கல்லூரியில் - இப்படி எல்லா இடங்களிலுமே "ச்சீ கருப்பு"  என்று சொல்லி அவரை ஒதுக்குவார்களாம்.

இது போன்ற ஒதுக்கல் கலாச்சாரத்தைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல்  "இந்த நிறத்தை வைத்து நான் சாதித்துக் காட்டுகிறேன், பார்!" என்கிற வைராக்கியம் தான் அதிகரித்ததாம்! 

எதை வைத்து சாதித்துக் காட்டுவது?  கருத்த நிறத்தை வைத்துக் கொண்டு பல பெண்கள்  பல சாதனைகளைச் செய்திருக்கின்றனர். குறிப்பாகக் கல்வித்துறையை எடுத்துக் கொண்டால் சாதனைகளுக்குப் பஞ்சமில்லை. அதனால் மாடலிங் துறையைத் தேர்ந்தெடுப்பது என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார். காரணம் கருப்பு நிறம் என்றால்  இந்தப் பக்கத்தில் யாரும் எட்டிபபார்ப்பதில்லை!  "நான் அதனச் செய்கிறேன்!" என்று சவாலோடு களம் இறங்கினார் ராச்சல்!

ஆமாம், மாடலிங், அழகிப்போட்டி என்றால் வெள்ளை நிறம் தான் எல்லாவற்றையும் முந்திக் கொண்டு நிற்கும். வெள்ளை நிறம் தான் பரிசுகளைக் குவிக்கும் என அனைத்தையும் உடைத்தெறிந்து விட்டார் ராச்சல்! கருப்பு நிறமும் சளைத்தது அல்ல என்று நிருபித்திருக்கிறார்.

2020-2021 ஆண்டு மிஸ் புதுவை,   2019-ல் மிஸ் டார்க் குவீன், தமிழ் நாடு, மிஸ் பெஸ்ட் எட்டிடியூட் - இப்படி பல விருதுகளைப் பெற்றிருந்தாலும்  மிஸ் புதுவை  தான் தனக்கு நெருக்கமானது என்கிறார் ராச்சல். காரணம் இங்கு தான் எனக்கு நிறைய குடைச்சலைக் கொடுத்தவர்கள் இருக்கிறார்கள், தனது நிறத்தை வைத்து ஒதுக்கியவர்கள் இருக்கிறார்கள்,  வயிறெறிந்தவர்கள் இருக்கிறார்கள், என்கிறார்!

பல ஆண்டுகள் புறக்கணிக்கப்பட்ட  சான் ராச்சலுக்கு  இப்போது தான் விடிவுகாலம் பிறந்திருக்கிறது. புதுச்சேரியில் உள்ள இளைய தலைமுறை அவரிடம் மாடலிங் பயிற்சி எடுத்து வருவதே அவருக்குக் கிடைத்த மாபெரும்  வெற்றி என்று சொல்லலாம்!

அது சரி  வருங்காலங்களில் அவர் என்ன இலட்சியத்தைக் கொண்டுள்ளார்?  மிஸ் இந்தியா போட்டியில் பங்குபெற்று  "மிஸ் இந்தியா" ஆக வேண்டும் என்பது தான் தனது இலட்சியம் என்கிறார். அவர் வெற்றி பெறுவார் என நம்பலாம்!

ஆமாம் கருமை நிறமும் அழகு தான்!  ஆண்களுக்கு மட்டும் அல்ல பெண்களுக்கும் தான்!


No comments:

Post a Comment