Tuesday 4 October 2022

குடிகார கொடூரன்

 

                                           தாயைக் காலால் மிதிக்கும் குடிகாரன்

இந்தியா, ஆந்திர மாநிலம், காக்கிநாடாவில் நடந்த ஒரு துயரச் சம்பவம். 21-வயது மகன் தாயின் மீது தொடுத்த  கொடூரத் தாக்குதல்.

குடி எவ்வளவு கேடானது என்பது எல்லாருக்குமே தெரிந்தது தான். ஆனால் குடிக்க வேண்டாம் என்று சொல்லுபவனும் குடிக்கிறான்.  குடிப்பவனும் தொடர் குடிகாரனாக மாறுகிறான்.

வெங்கண்ணா என்கிற அந்த குடிகார வாலிபன் குடிக்க பணம் கொடுக்கச் சொல்லி, தாயார் இலட்சுமி (வயது 63) அம்மாளிடம் கேட்கிறான். ஏற்கனவே பணம் கேட்டும் பணம் கொடுக்காததால் அடிக்கடி அடித்து தாயைச் சித்திரவதையும்  செய்திருக்கிறான். மகன் இப்படிக் கெட்டுப் போகிறானே என்கிற ஆதங்கத்தில் பணம் கொடுக்க மறுத்து வந்திருக்கிறார். பணம் இல்லை என்று சொல்லியும்  வந்திருக்கிறார்.

ஆனால் சம்பவத்தன்று,  அரசு கொடுக்கும் நிதி உதவி தாயிடம் இருக்கும் என்பதைத்  தெரிந்து கொண்டு தான் குடிக்க அந்தப் பணத்தைக் கொடுக்கமாறு தாயை மிரட்டியிருக்கிறான் மகன்.  தாயார் வழக்கம் போலவே மறுத்திருக்கிறார். 

மகனுக்கு அதற்கு மேல் பொறுமையில்லை.  குடிகாரனுக்கு எந்தக் காலத்தில் பொறுமை இருந்தது? அதுவும் வயதான கிழவியால் என்ன செய்துவிட முடியும் என்கிற இளக்காரம் வேறு. திண்ணையில் படுத்திருந்த  தாயாரை  தரதரவென நடுத்தெருவுக்கு இழுத்து வந்தான். தாயாரை அவரது கழுத்திலும், வயிற்றிலும் சராமாரியாக காலில் மிதித்து கொடுமாராகத் தாக்கினான்.

அவனது தாயார் வலி தாங்க முடியாமல் கதறியிருக்கிறார். அருகே இருந்த யாரும் அவரைக் காப்பாற்ற முயற்சி செய்யவில்லை. எல்லாரும் வேடிக்கை தான் பார்த்தார்கள். அனைவருமே குடிகாரர்கள் என்கிற போது அவர்கள் வேடிக்கை தான் பார்ப்பார்கள். வேறு என்ன செய்வார்கள்?

இப்போது மகன் சிறையில் விசாரணையில் இருக்கிறார். அம்மா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

நம் நாட்டிலும் இது போன்ற செய்திகளைப் படித்துக் கொண்டு தான் இருக்கிறோம். அங்கே அவன் சாராயத்தைக் குடிக்கிறான். இங்கே இவன் கஞ்சா குடிக்கிறான்.  விளைவுகள் எல்லாம் ஒன்று தான். பெயர் தான் வேறு. இங்கும் குத்துகிறான், வெட்டுகிறான், கொலை செய்கிறான். அதே விளைவுகள் தான்.

நமது சமுதாய இளைஞர்கள் எப்படி வளர்கிறார்கள் என்று பார்த்தால்  மனதிற்குக் கஷ்டமாகத்தான்  இருக்கிறது.  பள்ளியில் படிக்கின்ற காலத்திலேயே அவர்கள் ஏதோ ஒன்று அவர்கள் கையில் கிடைத்துவிடுகிறது. போதைப் பொருள்களுக்கு அடிமையாகி விடுகிறார்கள். இவர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

நாமும் குடிகாரக் கொடூரர்களை உருவாக்குகிறோம் என்றே தோன்றுகிறது!

No comments:

Post a Comment