Saturday 29 October 2022

முதல் பட்டியல் வெளியிடு

 

                        பி.கே.ஆர்  தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது

பி.கே.ஆர்.,   நாடாளுமன்றத்திற்குப் போட்டியிடும் தனது 72 வேட்பாளர்களின் பெயர்களை  வெளியிட்டிருக்கிறது. இதில் பெரும்பாலும் புதியவர்கள் போட்டியிடுகிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

பெரும்பாலும் அரசியல் கட்சிகள் ஏற்கனவே வெற்றி பெற்றவர்களைத்தான் களத்தில் இறக்குவார்கள் என்பது நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் பி.கே.ஆர். தலைவர் அன்வார் இப்ராகிம் விஷப்பரிட்சையில் இறங்கியிருக்கிறார் என்று தெரிகிறது. வெற்றிபெற்றால் வாழ்த்துகள். இல்லையேல் அனுதாபங்கள். வேறு நம்மால் எதையும் செய்தவிட முடியாது!

இந்த பட்டியலில் நம்ம 'ஆசாமிகள்' எத்தனை பேர் போட்டியிடுகின்றனர் என்பதைப் பார்ப்பது தானே நமது இயல்பு? வழக்கம் போல அப்படித்தானே! கொஞ்சம் தேடிப்பார்க்கையில்  ஆறு  இந்திய வேட்பாளர்களுக்குப் போட்டியிட வாய்ப்புக் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் வெற்றி பெற்றால் நமது சமுதாயத்திற்கு நல்லது நடக்கும் என எதிர்பார்ப்போம்!

இதிலே ஒரே ஒரு தொகுதி மட்டும் எனக்குப் பெரும் ஆச்சரியத்தைக் கொடுத்திருக்கிறது. நெகிரி செம்பிலான், போர்ட்டிக்சன் தொகுதி என்பது காலங்காலமாக இந்தியர் போட்டியிடும் தொகுதி. அந்த தொகுதியைப்பற்றி நான் அதிகமாகவே தெரிந்து வைத்திருக்கிறேன். பொதுவாக இது இந்திய வாக்காளர்கள் அதிகம் உள்ள ஒரு தொகுதி.  நாட்டில்  இந்தியர்கள் அதிகம் உள்ள தொகுதி. அந்தத் தொகுதியில் இன்றைய மாநில மந்திரி பெசார் போட்டியிடுவது சரியானதா என்பது எனக்குப் புரியவில்லை.

ஆனால் எனது கணக்குத் தவறாகக் கூட இருக்கலாம். இப்போது போர்ட்டிக்சன் தொகுதியோடு ரம்பாவ் தொகுதியும்  தனித்தனியாக பிரிக்கப்பட்டு விட்டதால்  இந்தியர்களின் வாக்குகள் குறைந்து போகக்கூடிய வாய்ப்பும் இருக்கிறது.  'அதிக இந்தியர்கள்' என்பது குறைந்து போயிருக்கலாம். ஒரு வேளை அதனை உத்தேசித்தே அந்தத் தொகுதிக்கு மலாய்க்கார வேட்பாளரை நிறுத்தியிருக்கக் கூடும்.

இன்னொன்று மாநில மந்திரி பெசார் எந்த அளவில் மக்களிடையே செல்வாக்குப் பெற்றவர் என்பது புரியாத புதிர். அவரை எத்தனை பேருக்குத் தெரியும் என்பதும் தெரியவில்லை. அவர் அப்படி ஒன்றும் ஓடி ஆடி வேலை செய்பவர் என்றும் சொல்ல முடியாது. ஆனால் மன்னிக்கவும்.  அவரைப்பற்றியான அரசியல் அறிவு எனக்குக் குறைவாக இருப்பதால் என்னுடைய கருத்தை சொல்லுவது சரியல்ல. அரசியலில் இருக்கும் உள்ளூர் இந்தியத் தலைவர்களுக்குத்தான் தெரிந்திருக்க வேண்டும். 

எப்படியோ பி.கே.ஆர். பட்டியல் வேளியாகிவிட்டது.  ஆனால் மாற்றங்கள் கடைசி நேரத்தில் வரலாம். எதனையும் உறுதி சொல்லிவிட முடியாது. இது அரசியல். அப்படித்தான் இருக்கும். நமது வாழ்த்துகள்!

No comments:

Post a Comment