Friday 7 October 2022

ஒருவரின் நிறத்தைக் கேலி செய்யாதே!


 ஒருவரின் நிறத்தைக் கேலி செய்வதும், தோற்றத்தைக் கேலி செய்வதும், அசிங்கம் என்று தூற்றுவதும்  எல்லா நேரங்களிலும்  சாதகமாக அமையும் என்று சொல்வதற்கில்லை.

நமக்கு அது கேலியாக இருந்தாலும், சம்பந்தப்பட்டவர் அதனைக் கண்டு கொள்ளாமல் இருப்பது போல் தோன்றினாலும், உண்மையில் அவர் உள்ளே புகைந்து கொண்டிருக்கிறார்  என்பது நமக்குத் தெரிவதில்லை. ஒருவரின் நிறத்தைக் கேலி செய்வது மிக மட்டமான ஒரு போக்கு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.  அது கணவன் மனைவியாக இருந்தாலும் அது வன்மத்தைத் தான் ஏற்படுத்தும்.

அப்படி ஒரு வேண்டத்  தகாத சம்பவம் ஒன்று இந்தியாவின் வடபகுதியான சத்தீஸ்கர் மாநிலத்தில்,  துர்க் மாவட்டத்தில்  நடந்ததைக் கண்டு மக்கள் அதிர்ந்து போயிருக்கின்றனர்.

இப்படி தொடர்ந்து கேலிக்கு இலக்கான ஒரு பெண் கடைசியில் பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்தார். இது கணவனுக்கும் மனைவிக்கும் நடந்த ஒரு போராட்டம்.  கணவர் ஆனந்த், வயது 40,  மனைவி சங்கீதா, வயது 30. கணவர் தனது மனைவியை தொடர்ந்தாற்போல "நீ கறுப்பி, அழகற்றவள், அசிங்கமானப் பிறவி"  என்று கேலி செய்துகொண்டும், மனைவியின் ஆத்திரத்தை தூண்டிக் கொண்டும் இருந்திருக்கிறார்.  இவர்கள் இருவருக்குமிடையே மனைவியின் கருத்த நிறத்துக்காக அடிக்கடி சண்டை சச்சரவு ஏற்படுவது வழக்கமாக ஒன்றாக விட்டது.

கடைசியில் மனைவி பொறுமை இழந்தார்.  தன்னை இப்படி தொடர்ந்து அவமானப்படுத்துவதை  அவர் விரும்பவில்லை.  சென்ற ஞாயிற்றுக் கிழமையன்று வழக்கம் போல மனைவியைக் கேலி செய்திருக்கிறார். சீண்டியிருக்கிறார். மனைவி வீட்டில் அருகே கிடந்த கோடாரியைக் கொண்டு கணவனைப் போட்டுத் தள்ளியிருக்கிறார். போட்டுத் தள்ளியதில் கணவரின் உயிர் அத்தோடு முடிவுக்கு வந்தது. அத்தோடு அந்த மனைவிக்கு ஆத்திரம் தீரவில்லை. அவருடைய ஆண்குறியையும் வெட்டிப் போட்டிருக்கிறார்.

இது போன்ற சம்பவம் நிச்சயமாக நமக்கு எந்த சந்தோஷத்தையும் கொடுக்கவில்லை. மிகவும் துயரமான ஒரு சம்பவம்.

நிறத்தைக் கேலி செய்வது, உருவத்தைக் கேலி செய்வது, அழகற்றவர் என்று கேலி செய்வது, சிலரது ஊனத்தைக் கேலி செய்வது, திக்கித்திக்கிப் பேசுவதைக் கேலி செய்வது, கால் ஊனம் உள்ளவர்களைக் கேலி செய்வது - இப்படிக் கேலி பேசுவதை நாம் நிச்சயமாக ஆதரிக்கக் கூடாது. இப்படிக் கேலி செய்கின்ற பழக்கம் பெரும்பாலும் பெற்றோர்களிடமிருந்தே வருகிறது என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். பெற்றோர்கள் மரியாதையுடன் ஊனமுற்றவர்களை நடத்தினால் நமது பிள்ளைகளும் நம்மைப் பின்பற்றுவார்கள்.  எல்லாவற்றுக்கும் பெற்றோர்களே காரணம்.

யாரும் யாருக்கும் குறைந்தவர்களல்ல. நாம் அனைவரும் சமம். அதுவே நமது பலம்!

No comments:

Post a Comment