Sunday 30 October 2022

ஏற்றுக்கொள்ள முடியாத தவறு!

 

வரலாறுகளை யார் வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் ஒரு நிபந்தனை. வரலாறு தெரிந்தவர்கள் தான் வரலாறு எழுத வேண்டும்.

வரலாறு சிறியவர்களுக்காக இருந்தாலும் சரி, பெரியவர்களுக்காக இருந்தாலும் சரி, அதுவும் குறிப்பாக பள்ளிப்பாடப் புத்தகங்களில், வரலாறுகள் நூறு விழுக்காடு சரியாக இருக்க வேண்டும்.

ஆனால் எங்கோ தவறு நடந்திருக்கிறது. சரித்திர ஆசிரியர்கள் டாகடர் மகாதிரின் வரலாற்றை  எப்படி மாற்றி எழுதினார்களோ அதிலிருந்தே தங்களின் விருப்பத்திற்கேற்ப மாற்றி எழுதுவது எங்களது உரிமை  என்று செயல்பட ஆரம்பித்துவிட்டார்களோ என்றே  நினைக்கத் தோன்றுகிறது! அதுவும் அம்னோ சரித்திரம் தான் மலேசிய சரித்திரம் என்று எண்ணவும் ஆரம்பித்துவிட்டார்கள்!

ஐந்தாம் ஆண்டு பள்ளிப்பாடப் புத்தகத்தில் துன் சம்பந்தன் அவர்களைப்பற்றிக் குறிப்பிடும் போது   முதலில் அவரது பெயர் வெறும்  சம்பந்தன் என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவர் பெற்ற துன் விருது புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. இன்னொன்று அவரது புகைப்படம் மாற்றப்பட்டிருக்கின்றது! அவரது புகைப்படைத்திற்குப் பதிலாக  மலேயாவின் முதல் கல்வி அமைச்சர்  டத்தோ சர் EEC துரைசிங்கம் அவர்களின் புகைப்படம் வெளியிடப்பட்டிருக்கின்றது!

இதனைச் சுட்டிக்காட்டி துன் சம்பந்தன் அவர்களின் மகள் தேவகுஞ்சரி வருத்தப்பட்டிருக்கிறார். துன் சம்பந்தன் அவர்கள் மலேயாவின்  முதல் தொழிலாளர் அமைச்சராக இருந்தவர். நீண்டகாலம் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்.  ம.இ.கா.வின் நீண்டகாலத் தலைவர். பல்வேறு பதவிகள் வகித்தவர்.

ம.இ.கா.வினர் இது பற்றி வாய் திறக்கவில்லை. தங்களது கட்சியின் முன்னாள் தலைவருக்கு நேர்ந்த அவமரியாதைப்பற்றி கவலைப்படவில்லை.    இதுபற்றி நாங்கள் அறிந்திருக்கவில்லை என்று அவர்களால் சொல்ல முடியாது.  அப்புறம் எதற்கு கல்விப்பிரிவு என்று ஒன்றை நிறுவி அதற்கு என்று ஒரு தலைவர்?

இது சமுதாயத்திற்குத் தலைகுனிவு  என்று ம.இ.கா.வினர் உணர்ந்து கொள்ளவில்லை. ஒரு தவறு நேர்ந்திருக்கிறது. அதனை அவர்களது குடும்ப உறுப்பினர்கள் தான் மக்களின் கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கின்றனர்.  பதவியில் உள்ளவர்கள் கண்டு கொள்ளவில்லை.

இப்படித் தவறான புகைப்படத்தைப் போட்டவர்கள் வேறு என்னன்ன தவறான தகவல்களைக் கொடுத்திருப்பார்களோ தெரியவில்லை. சரித்திரம் அறியாதவர்கள் சரித்திரத்தை எழுதினால் நாட்டுக்குத் தான் தரித்திரம் பிடிக்கும்!

இது சாதாரணத் தவறு அல்ல! அசாதாரணத்தை விட அசாதாரணம்!

No comments:

Post a Comment