இந்தியர்களின் நலனுக்காகவும், இந்தியர்களின் முன்னேற்றத்திற்காகவும், இந்தியர்களின் தொழில் வளர்ச்சிக்காகவும் உருவாக்கப்பட்ட மித்ரா அமைப்பு இப்போது தடம் மாற்றப்படுகிறதா என்கிற கேள்வி எழுகிறது.
மித்ரா அமைப்பு இப்போது பிரதமர் துறைக்கு மாற்றப்பட்டிருப்பது மகிழ்ச்சியான செய்தியே. ஒற்றுமைத்துறை அமைச்சில் கீழ் மித்ரா இருந்த போது பணம் எதற்குச் செலவு செய்தார்கள் என்பதற்கான அடையாளமே இல்லாமல் செய்து விட்டார்கள்! ஒற்றுமைத்துறை அமைச்சர் கடைசிவரை வாய் திறக்கவே இல்லை! விளக்கம் கொடுக்கவே இல்லை! ஒரு வேளை அவருக்கு ஓய்வு பெறும் காலம் நெருங்கியிருக்கலாம்!
ஆனால் பிரதமர் துறைக்கு மாற்றப்பட்ட பின்னர் அவர்களின் முதன் முதலாக செய்த காரியம் ஒரு தமிழ்ப்பள்ளிக்கு, புக்கிட் ஈஜோக் தோட்டத் தமிழ்பள்ளிக்கு, மித்ராவின் உதவியால் பள்ளிக்கு மேசை, நாற்காலிகள் போன்ற பள்ளி உபகரணங்கள் வழங்கப்பட்டிருக்கின்றது. அது நமக்கு மகிழ்ச்சியே!
மேசை, நாற்காலிகள் இல்லாமல் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும். மித்ராவால் பள்ளிக்கு வழங்கப்பட்ட தொகை 3,13,000 வெள்ளி என்று மித்ரா கூறுகிறது. வரவேற்கிறோம்.
ஒரு சில கேள்விகள் நம்மிடம் உண்டு. கல்வி அமைச்சு செய்ய வேண்டிய வேலையை மித்ரா செய்திருக்கிறது. கல்விக்கு என கோடி கணக்கில் நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் கல்வி அமைச்சு ஏன் அதனைச் செய்யவில்லை?
மித்ரா ஏன் அதனைச் செய்கிறது?
ஒரு வேளை அவசரம் கருதி மித்ரா இந்த உதவியைச் செய்திருப்பதாகவே நாம் கருதுகிறோம். காரணம் இப்போது நிரந்தர அரசாங்கம் இல்லாத நிலையில் மித்ராவின் நிதி பயன்படுத்தப்படுவதாகவே நமக்குத் தோன்றுகிறது. பின்னர், இப்போது பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட இந்த நிதி, மித்ராவுக்குக் கல்வி அமைச்சு திரும்ப ஒப்படைத்துவிடும் என நாம் நம்புகிறோம்.
இது அவசர உதவி என்பதில் ஐயமில்லை. தேர்தல் காலம் வேறு. சாதனை என்று சொல்லிக்கொள்ள இதுவும் உதவும். இங்கும் அரசியல் தான்!
எது எப்படி இருந்தாலும் மித்ரா தனது கடமையில் இருந்து தவறக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது தான் நமது கோரிக்கை. இடைக்காலத்தில் மித்ரா பாதை தவறிவிட்டது என்பது தான் நீண்ட நாளைய குற்றச்சாட்டு. அதற்குக் காரணமானவர்கள் ம.இ.கா.வினர் தான் என்பதும் மக்களுக்குத் தெரியும்.
வருங்காலங்களில் மித்ரா செய்ய வேண்டிய முக்கிய பணி என்பது இந்தியர்களின் பொருளாதார வளர்ச்சிக்காக இருக்க வேண்டும். இந்தியர்களை வியாபாரத்துறையில் வெற்றி பெற மித்ரா உதவ வேண்டும். இதுவரை மித்ரா உதவவில்லை என்று சொல்ல முடியாது. ஆனால் அந்த உதவிகள் ம.இ.கா. சார்ந்த பெரும் புள்ளிகளுக்குத் தான் போய்ச் சேர்ந்தது என்பதும் உண்மை!
மித்ரா தடம் மாறக்கூடாது என்பதே நமது வேண்டுகோள். அவர்களது கடமையைச் செய்யவேண்டும் என்று தான் சொல்ல வருகிறோம். கட்சிக்காரர்கள் பேச்சைக் கேட்டு தனது பாதையை மாற்றிக்கொள்ளக் கூடாது என்பது தான் நமது ஆலோசனை!
No comments:
Post a Comment