Friday 14 October 2022

இது சாத்தியமா?

 

ஜனநாயகத்தில் மக்கள் குரலே மகேசன் குரல் என்பார்கள்.  இப்போதெல்லாம் அரசியலில் ஊழல்  வாய்ந்தவர்களின் குரல் தான் மகேசன் குரல் என்பதை நாம் பார்க்கிறோம்.

15-வது பொதுத் தேர்தல் இப்போது வேண்டாம் என்பது தான் மக்களின் குரல். ஆனால் அது எடுபடவில்லை.  வெள்ளத்திற்கும், மழைக்கும்  "பேப்பே!"  என்று ஊழல்வாதிகள் ஊதித்தள்ளி விட்டார்கள்!

அதனை நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால்  கிள்ளான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ இப்போது நீதிமன்ற நடவடிக்கையை எடுத்திருக்கின்றார். இது எந்த அளவுக்குப் பயனளிக்கும் என்பது நமக்குத் தெரியாவிட்டாலும், பரவாயில்லை, சட்ட  நடவடிக்கை எடுப்பது என்பது மக்களின் எதிர்ப்புக்குரலைக் காட்டுவதற்குத்தான்.

ஆனாலும் நீதிமன்றம் என்ன சொல்லப் போகிறது என்பது பற்றியெல்லாம் யாருக்கும் கவலையில்லை. தேர்தல் வேலைகள் எல்லாம் ஆரம்பமாகி விட்டன. நீதிமன்றம் அப்படி ஒன்றும் நாட்டையே  கவிழ்த்துப் போடும் அளவுக்கு அதிரடி தீர்ப்பு வழங்கும் என்கிற எதிர்ப்பார்ப்பு நமக்கும் இல்லை,  அரசியல்வாதிகளுக்கும் இல்லை! சும்மா,  சார்லஸ் சந்தியாகோ தனது கடமையில் ஒன்றாகச் செய்கிறார். அதற்கு ஏதேனும் பலன் இருக்கிறதா என்பதை அவரைப்போலவே நாமும் பொறுத்திருந்து பார்ப்போம்.

நீதிமன்ற தீர்ப்பு வருவது வரட்டும். நல்லதோ கெட்டதோ நடக்கட்டும்.  காபந்து பிரதமர் நாடாளுமன்றம் கலைத்தாகிவிட்டது என்று அறிவித்துவிட்டார். பேரரசரும் பொதுத் தேர்தல் நடத்த அனுமதி கொடுத்துவிட்டார். இதனையெல்லாம் மீறியா நீதிமன்றத்தின் தீர்ப்பு அமையப் போகிறது?

இப்போது அரசியல் கட்சிகள் அனைத்தும் வேட்பாளர்களை அறிவிக்கும் பணியில் ஈடுபட்டுவிட்டன. குறிப்பாக மலாக்கா மாநிலம் நாடாளுமன்றத்திற்குப் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. வரும் ஓரிரு வாரங்களில் எல்லாக் கட்சிகளுமே வேட்பாளர்களை அறிவித்துவிடும். பக்காத்தான் ஹரப்பான்  அடுத்த வாரம் தனது வேட்பாளர்களின் பெயர்களை வெளியிடும் என்பதாக அறிவித்திருக்கிறது.

ஆக எல்லாருமே, எல்லாகட்சிகளுமே தயார் நிலையில் இருக்கும் இந்த நேரத்தில் நீதிமன்றம் என்னத்தைச் சொல்லப் போகிறது? சாத்தியமாகத் தோன்றவில்லை!

No comments:

Post a Comment