Tuesday 18 October 2022

இளைஞர்கள் தவறாக....!

 

ஜொகூர், மூவார் அரசியல் பரப்புரை ஒன்றில்  குண்டர் கும்பலின் அட்டாகசத்தை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை.

பக்காததான் ஹரப்பானும், மூடா கட்சியினரும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த பரப்புரை நிகழ்வில்  'மாட் மோட்டோர்' என்னும் குண்டர் கும்பல் தேவையற்ற முறையில் அத்துமீறி நுழைந்து பரப்புரையின் போது இடையூறு செய்தது மிகவும் கண்டிக்கத்தக்கது.

ஜொகூர் மாநிலம் தேசிய முன்னணியின் அதாவது அம்னோவின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு  மாநிலம். இந்த நிலையில் இப்படி ஒரு இடையூறு நடக்கும் போது, அதுவும் 'மாட் மோட்டோர்' போன்ற மலாய்க்கார இளைஞர் அதிகம்  கொண்ட குண்டர் கும்பல் இதனை நடத்தும் போது நிச்சயமாக அது அம்னோவின் தூண்டுதல் இல்லாமல் நடக்க வாய்ப்பில்லை. அந்த இளைஞர்களும் தங்களின் விருப்பத்திற்கு ஆடுபவர்கள் என்று எதிர்ப்பார்க்க முடியாது. எங்கிருந்தோ அவர்களுக்கு உதவிகள் கிடைக்கின்றன. எந்த ஒரு பக்கபலமும் இல்லாமல் அவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடமட்டார்கள்.

அந்த இளைஞர்களும் இது போன்ற செயல்களில் ஈடுபடும் போது  காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள் என்பதும் அவர்களுக்குத் தெரியும். ஆனாலும் அவர்கள் ஈடுபடுகிறார்கள் என்றால் நாம் அதனைப் புரிந்து கொள்ளலாம். மேல் இடத்தின் ஆதரவு அவர்களுக்குப் பரிபூரணமாக உண்டு என்பது தெரிகிறது!

இந்த மாட் மோட்டார் கும்பல் இத்தோடு நிறுத்திக் கொள்வார்களா  அல்லது நாடெங்கிலும் தொடருமா என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்த 15-வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்கிற நிலையில் போட்டியிடுகிறது. அதை நாம் குறை சொல்ல வழியில்லை.  எல்லா கட்சிகளுமே வெற்றியை நோக்கித்தான் ஓடிக்கொண்டிருக்கின்றன. ஆனால் அம்னோவுக்கு இது வாழ்வா சாவா பிரச்சனை.  தோல்வி அடைந்தால் அவர்களில் பலர் வழக்குகளைச் சந்தித்தாக வேண்டும் என்கிற நிலையில் இருக்கின்றனர்!

அதற்காக குண்டர் கும்பல்களை வைத்துக் கொண்டுதான்,    வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பது தவறு.  தேர்தல் நடக்கும் போது முழப்பத்தை ஏற்படுத்தி வெற்றி பெற நினைப்பது  ஒரு படிக்காத சமுதாயத்தில் நடக்கலாம்.   ஆனால் நாம் ஒரு படித்த சமுதாயம். நமக்கென்று ஒரு பெருமை இருக்கின்றது. படித்தவர்கள் என்கிற பெருமை உண்டு. 

நாம் சொல்ல வருவதெல்லாம் ஆளும் தரப்பினர், அது எந்த மாநிலமாக இருந்தாலும் சரி,  குண்டர் கும்பல்களை வைத்துக் கொண்டு தேர்தலில் வெற்றி பெற எண்ணம் கொண்டிருக்க வேண்டாம்.  மக்களைக் குழப்ப நினைத்தால் நீங்கள் தான் குழம்பிப் போவீர்கள்!

ஜனநாயக உரிமைகளைப் பின்பற்றி வெற்றிபெறுவதே பெருமைக்குரியது!

No comments:

Post a Comment