Sunday 2 October 2022

எடு கடப்பாரையை! உடை வீட்டை!

 


இது தமிழ் நாட்டில், மயிலாடுதுறையில் நடந்த சம்பவம். கேட்பதற்கு மனத்திற்குக் கஷ்டமாக இருந்தாலும்   மற்றவர்கள், குறிப்பாக பெண்கள், தெரிந்து கொள்ள வேண்டிய சம்பவம். தமிழர் சமுதாயம் இன்னுமா இப்படி என்று நொந்து கொள்ள வேண்டிய சம்பவம். ஆண்கள் சமுதாயம் என்ன தான் வீர வசனம் பேசினாலும் பெண் வீட்டாரிடமிருந்து எவ்வளவு பிடுங்களாம் என்கிற ஆசை மட்டும் போகவில்லை! ஆண் மகன் சரியாக இருந்தால் அவன் அம்மா அடங்கியிருப்பார். ஆனால் இருவருமே கூட்டுக் களவாணிகள்! யாரையும் நம்ப முடிவதில்லை!

நடராஜனுக்கும் பிரவீனாவுக்கும் சென்ற ஆண்டு திருமணம் நடைப்பெற்றது.  பிரவீனா மாப்பிள்ளை வீட்டுக்கு வரும்போது சும்மா வரவில்லை. 24 பவுன் நகைகள்,  மாப்பிள்ளைக்கு ஒரு மோட்டார் சைக்கிள், மூன்று இலட்சம் பெறுமானமுள்ள  சீர்வரிசை பொருள்களோடு அவர் வந்திருக்கிறார். திருமணம் ஆகி மூன்று மாதங்கள் எந்தப் பிரச்சனையும் இல்லாமல்  கழிந்தன. மணமக்களும் மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்திருக்கின்றனர்.

மூன்றாவது மாதம் ஆட்டம் ஆரம்பமாகியது. மாப்பிளைக் குடும்பத்தார்  வரதட்சணை போதாது இன்னும் வேண்டும் என்று சொல்லி மருமகளைக் கொடுமைப் படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். மாப்பிளை நசராஜனும்   மனைவியைக் கொடுமைப்படுத்துகின்ற செயலில் இறங்கியிருக்கிறார். அவர் மனைவியை வெளியே அழைத்துச் செல்வதைத்  தவிர்த்திருக்கிறார்.  நடராஜன் வீட்டில் இல்லாத சமயத்தில் அவரது தம்பி சதீஷ் என்பவர் தனது அண்ணியின் மீது பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. அது பற்றி கணவரிடம் புகார் கூறிய போதும் அவர் அதைக்கண்டு கொள்ளவில்லையாம்.  நாளடைவில் வரதட்சணைப் பிரச்சனை பூதாகாரமாகவே   மருமகள் பிரவீனாவை வீட்டை விட்டு துரத்துகின்ற  முடிவுக்கு வந்து  வீட்டைவிட்டு  துரத்தியும் விட்டார்கள். வீட்டை இழுத்துப்  பூட்டிவிட்டு அவர்கள் தங்களது  உறவினர் வீட்டுக்குப் போய்விட்டார்கள். கணவர் நடராஜனோ, அவர் சென்னையில் வேலை செய்வதால்,   தனது மனைவி கொடுத்த மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு,   தனது பொறுப்பை தாயிடம்  ஒப்படைத்துவிட்டு  போய்விட்டார்!.

ஆனால் பிரவீனா,  அவர்கள் நினைத்தபடி எங்கும் போய்விடவில்லை. போவதற்கு  அவசியமுமில்லை என்று வீட்டுக்கு வெளியே கணவர் வீட்டார்  வருவார்கள்  என்று காத்திருந்தார். இருபது நாள்கள் ஆகியும் அவர்கள் வரவில்லை.   ஊர் பெரியவர்களிடம் புகார் கூறியும் யாரும் கண்டுகொள்ளவில்லை. காவல்துறையிடமும் புகார் செய்திருக்கிறார்.

கடைசியில் பிரவீனா பொறுமை இழந்தார்.  பொது மக்கள் உதவியோடு கடப்பாரையைக் கொண்டு வீட்டின் பூட்டை உடைத்து உரிமையோடு  தனது கணவரின் வீட்டுக்குள் புகுந்து விட்டார். இரவு முழுவதும் அங்கேயே தங்கியிருந்தார்.

இப்போது காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டுள்ளனர். போனவர்கள் வந்த பிறகு தான் என்ன செய்யப் போகிறார்கள் என்பது தெரிய வரும்.

எப்படிப் பார்த்தாலும் அந்தப் பெண்ணின் கணவர் சரியான மனிதராகத் தெரியவில்லை. அவரின் தம்பியும் யோக்கியனாக இல்லை. குடும்பமே கோளாறான குடும்பமாகத் தெரிகிறது. இந்தப் பெண் மாட்டிக் கொண்டார் என்றும் புரிகிறது.  அதற்காக வீட்டைவிட்டு சும்மா ஓடிவிட முடியாது அல்லவா? அவர் செய்த காரியம் சரியானது தான். அவர்களிடம் அடிபணியக் கூடாது! வீட்டு நிர்வாகம் அனைத்தையும் அவர் கையில் கொண்டு வரவேண்டும். வீரப்பெண் என்று கணவரின் குடும்பத்தாருக்கு நிருபிக்க வேண்டும்.

No comments:

Post a Comment