Thursday 20 October 2022

என்னால் தான் முடியும், நம்புங்கள்!

 

  


                      "இந்த நாட்டுக்கு முன்னேற்றத்தைக் கொண்டு வருவதற்கு என்னைத்தவிர வேறு யாராலும் முடியாது! நான் சொல்லுவதை நம்புங்கள்! மூன்றாவது முறையாக நான் பிரதமராக வர விரும்புகிறேன்!" என்று டாக்டர் மகாதிர் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டு வருகிறார்!

நாமோ, அவருடைய வயதை வைத்து ஒரு கணக்குப் போட்டு வைத்திருக்கிறோம். அட! 97  வயது  மனிதருக்கு இன்னும் அரசியல் ஆசையா? என்று! அவருக்கு ஆசை இருந்தால் தப்பு ஏதுமில்லை. அவருடைய வாழ்க்கையே அரசியலைச் சுற்றித் தானே வந்திருக்கிறது.  அதனால் அரசியலை அவ்வளவு எளிதில் அவரால் விட்டுவிட முடியாது.

ஆனால் அவர் பேசுகின்ற  அரசியல் கருத்துக்களைத் தான் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அது தான் நம்மை கொஞ்சம் நெளிய வைக்கிறது!

இரண்டாவது முறை பிரதமராக வந்த போது அவர் அந்தப் பதவியைத் தொடர்ந்திருந்தால், அந்தப் பதவி காலத்தை நிறைவு செய்திருந்தால்,  அவரை நாம் பாராட்டலாம். "அன்வார் பிரதமரானால் நாட்டை அவரால் வழிநடத்த முடியாது!" என்று சொல்லிக் கொண்டு அவர் பதவியில் நீடித்திருக்கலாம்!  அரசு கவிழ்வதற்கான வாய்ப்பு இருந்திருக்காது. முக்கல், முனகலோடு பக்காத்தான் அரசாங்கம் நீடித்திருக்கும். அவரும் நினைத்த காரியத்தைச் சாதித்திருக்கவும் முடியும். ஆனால் அத்தனையும் பாழடிக்கப்பட்டு விட்டது!

சரி, இன்னொரு பக்கம் அவர் சொல்லுகின்ற "என்னைத்தவிர"  என்பதற்கு  நாம் கேட்க வேண்டிய கேள்விகள் உண்டு. இந்த நாட்டின் நீண்ட நாள் பிரதமர் என்றால் அவர் டாக்டர் மகாதிர் மட்டும் தான். 22 ஆண்டு காலம் பிரதமராக இருந்தவர். நாட்டையே தலைகீழாக மாற்றியவர். தன் சொல்லுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும்  என்று அடம்பிடித்து பல அநீதிகளைச் செய்தவர்! கல்வி கொள்கையையே அவர் விருப்பத்திற்கு ஏற்றாற் போல  மாற்றியமைத்தவர்!

இப்படி மலாய்க்காரர்களுக்கு ஏற்றாற் போல எல்லாவற்றையும் மாற்றி அமைத்தவரால் ஏன் ஒரு பிரதமரை உருவாக்க முடியவில்லை? டாக்டர்களை உருவாக்கினார், வழக்கறிஞர்களை உருவாக்கினார் - இப்படி எல்லாத் துறைகளில் நிபுணர்களை உருவாக்கியவர் ஏன்  அவரைப்போல அரசியல்வாதிகளை உருவாக்க முடியவில்லை? எங்கே தவறு நடந்தது?

ஓர் அரசியல்வாதியை, ஓரு பிரதமரை உருவாக்க முடியவில்லை என்றால் அவருடைய கல்விக் கொள்கை அனைத்தும் தவறு என்பதை அவரால் ஒப்புக்கொள்ள முடியுமா? அவர் தானே அதற்குப் பொறுப்பு?

அப்படியென்றால் நாட்டைத்  தவறான வழியில் நடத்திச் சென்றவர் மீண்டும் ஏன் பிரதமர் பதவிக்கு வர வேண்டும்?

நமக்குத் தெரிந்ததெல்லாம் அவர் ஓர் அரசியல் தோல்வியாளர்! அரசியலுக்கு இலாயக்கற்றவர்!  இதைத்தான் நாம் சொல்ல முடியும்! மீண்டும் பிரதமராக வருவதற்கு அவருக்கு வாய்ப்பில்லை!


No comments:

Post a Comment