Sunday 23 October 2022

கார்கள் ஜாக்கிரதை!

 

விடுமுறை காலம். சாலைகளில் வாகன நெரிசல்  கழுத்தை நெரிக்கும் அளவுக்குக் கார்களில் மக்கள் பயணம்.

நமக்கு இதெல்லாம் புதிதில்லை.  எப்போதும் உள்ள நடைமுறை தான். மலாய்,  சீன, இந்திய பெருநாள் காலங்களில் சாலைகளில்  கார்கள் நிரம்பி வழிவது என்பது நாம் அறிந்தது தான்.

இருந்தாலும் மனம் கேட்கவில்லை.  இது போன்ற சமயங்களில் கார் ஓட்டுபவர்கள்  கொஞ்சம் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பது மிக மிக அவசியம்.

கோபபட்டு  தாறுமாறாக கார் ஓட்டினால் ஆபத்து நமக்கு மட்டுமல்ல நியாயமாக கார் ஓட்டுபவர்களுக்கும் தான்.

விபத்துகளுக்கு முக்கியமான காரணகர்த்தாக்கள் என்று சொன்னால் அது மோட்டார் சைக்கிள் ஓட்டும் இளைஞர்கள் தான்.  அவர்கள் யார் சொன்னாலும் எதனையும் கேட்காத ஜென்மங்கள்! அவர்களை நொந்து கொள்வதால் யாருக்கு என்ன பயன்? பொறுப்பற்ற முறையில் தான் அவர்கள் ஓட்டுகிறார்கள். அதற்கானத்  தண்டனைகளையும்  பெறுகிறார்கள்.  ஆனால் திருந்த மறுக்கிறார்கள், என்ன செய்ய?

எது எப்படி இருப்பினும் கார் நம்முடையது. நாம் காரில் பயணம் செய்கிறோம். நாமே காரை ஓட்டுகிறோம்.  காரில் நம்முடைய குடும்ப உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் கொண்டு சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்ப்பது நமது பொறுப்பு, நமது கடமை. முடிந்தவரை எந்தவொரு விபத்தும் இல்லாமல்  நமது பயணம் அமைய வேண்டும்.

நமது பயணங்கள் மகிழ்ச்சியாக அமைய வேண்டும். உற்றார் உறவினர்களோடு சந்தோஷத்தை ஏற்படுத்த வேண்டும். காரணம் இது பெருநாள் காலம். பெரியவர்களோடு, பெற்றோர்களோடு, உறவுகளோடு, நண்பர்களோடு, அக்கம் பக்கம் உள்ளவர்களோடு  உரையாடி  மகிழ வேண்டும்.  மீண்டும் பார்ப்பது அடுத்த நீண்ட விடுமுறையின் போது தான். அதனால் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

இப்படி எல்லாமே மகிழ்ச்சியோடு அமைய வேண்டும். இந்த  விடுமுறை அந்த வாய்ப்பை நமக்குக் கொடுத்திருக்கிறது. அதனை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வது நமது கடமை. 

அதுவும் கார்களில் பயணம் செய்பவர்களுக்கு மிகவும் பாதுகாப்பு உணர்வோடு நடந்து கொள்ள வேண்டும்.  நாம் அலட்சியமாக நடந்து கொண்டாலும் நமக்கு ஆபத்து. பிறர் அலட்சியமாக நடந்து கொண்டாலும் நமக்கும் ஆபத்து.

உங்கள் பயணம் சுகமாக அமைய வாழ்த்துகிறேன்!

No comments:

Post a Comment